'முதல்ல சசிகலாவை நீங்குங்க!' -ஓபிஎஸ் திடீர் நிபந்தனை இணைப்பில் சிக்கல்!

தமிழகம்
Typography

சென்னை, ஆக.21- சசிகலாவை நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓ.பன்னீர்செல்வம் அணி, நிபந்தனை விதிப்பதால் கடைசி நேரத்தில் இணைப்பு முயற்சியில் இழுபறி நீடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அதிமுகவின் ஓபிஎஸ் அணியும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியும் (ஈபிஎஸ்) அணியும் அமாவாசை நாளான இன்று இணையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.. 

இரு அணி தலைவர்களும் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருவார்கள் என்று கூறப்பட்டனர். ஆனால் சசிகலா நீக்கம் பற்றிய அறிவிப்பு வெளியாக வேண்டும் என்று ஓபிஎஸ் அணியினர் உறுதியாக கூறி வருவதால் இணைப்பில் இழுபறி ஏற்பட்டுள்ளது.

ஓபிஎஸ் வீட்டில் இறுதிக்கட்ட ஆலோசனை நடைபெற்றது. பிற்பகல் 12 மணிக்கு இரு அணி தலைவர்களும் இணைப்பு பற்றிய அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியானது. ஜெயலலிதா நினைவிடமும் அலங்கரிக்கப்பட்டது. அதிமுக தலைமை அலுவலகமும் திருவிழா கோலம் பூண்டது. தொண்டர்கள் குவிந்தனர். இதனால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டது.

சசிகலாதான் இன்றைக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் என்று டிடிவி தினகரன் அணியினர் கூறி வருகின்றனர். எனவே, சசிகலாவை முற்றுலும் நீக்கினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என்று ஓபிஎஸ் அணியினர் கூறியுள்ளனர். 

சசிகலா நீக்கம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலாவை நீக்க எடப்பாடி பழனிச்சாமி அணி தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. எனவே ஓபிஎஸ் அணியினர் அதிமுக தலைமை அலுவலகம் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது.

ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகிய இரு அணி தலைவர்களும், நிர்வாகிகளும் இன்று அதிமுக தலைமை அலுவலகம் வருவார்கள் என்று கூறப்பட்டதால் ஆரத்தி தட்டுடன் மகளிர் அணியினர் காத்திருக்கின்றனர். தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். .

சசிகலாவை நீக்கவேண்டும் என்று தொண்டர்களும் விரும்புகின்றனர். ஆனால் சசிகலாவை நீக்கினால் நீதிமன்றம் செல்வோம் என்றும், ஆட்சி ஆட்டம் காணும் என்றும் தினகரன் தரப்பினர் எச்சரித்துள்ளனர். சசிகலாவை நீக்கிவிட்டு ஓபிஎஸ் அணியை இணைப்பாரா? எடப்பாடி பழனிச்சாமி நொடிக்கு நொடி அதிமுக தொண்டர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. 

BLOG COMMENTS POWERED BY DISQUS