பிக் பாஸ் தற்கொலை முயற்சி: ஓவியாவுக்கு எதிராக போலீஸ் விசாரணை! 

தமிழகம்
Typography

 சென்னை, ஆக.12- பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியா தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியின் வழி தமிழக ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்று அவர்களின் மனதில் இடம் பிடித்தவர் ஓவியா.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது அவருக்கு எதிராக பலரும் செய்த சதி மற்றும் காதல் தோல்வி ஆகியவற்றின் காரணமாக விரக்தி அடைந்த ஓவியா அங்கிருந்த நீச்சல் குளத்தில் மூழ்கி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவர் அந்த நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

ஓவியா வெளியேற்றப்பட்ட பின்னர், பிக் பாஸ் நிகழ்ச்சி படுத்து விட்டது. ஓவியாவுக்காக அந்த நிகழ்ச்சியை இதுவரை பார்த்து வந்த ரசிகர்கள், அவர் இல்லாத நிகழ்ச்சியை இனிப் பார்ப்பதில்லை என முடிவெடுத்ததால் அந்த நிகழ்ச்சி வீழ்ச்சி காணத் தொடங்கியது.

இந்நிலையில், பிக் பாஸ் வீட்டில் அவர் தற்கொலைக்கு முயன்றது தொடர்பாக போலீசார் அவருக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இந்த தற்கொலை முயற்சி தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த பாலாஜி என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் இந்த விசாரணையை நடத்துகின்றனர்.

இந்தத் தற்கொலை முயற்சி விவகாரத்தில் நடந்தது என்ன என்பதை விளக்குவதற்கு போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படி நஸ்ரத் பேட்டை பொலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் ஓவியாவுக்குச் சம்மன் அனுப்பியுள்ளார்.

ஓவியாவின் நிர்வாகியிடம் விசாரித்த போது, ஓவியா தற்கொலைக்கு முயற்சிக்கவில்லை என்று தமக்கு விளக்கம் அளித்ததாக இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் கூறினார்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS