சென்னை, மே 22- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கதீட்ரல் சாலையில் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதனால் அச்சாலை முழுதும் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. ஆர்ப்பாட்டக்காரர்கள் ரஜினியின் வீடு நோக்கி சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. 

ரசிகர் சந்திப்பின்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசிய ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று சென்னையில் அவரின் உருவ பொம்மை எரிக்கப்பட்டது. தமிழர் முன்னேற்றப்படை அமைப்பினர் சென்னை கதீட்ரல் சாலையில் உருவ பொம்மையை எரிக்கப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. 

அவ்வமைப்பின் தலைவர் வீரலட்சுமியின் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது எனவும் அவர் அரசியல் பேசக்கூடாது எனவும் கோஷமிட்டு பொம்மையை எரித்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களைப் போலீசார் கைதுச் செய்தனர். 

சென்னை, மே.19- "நான் பச்சைத் தமிழன். என்னைத் தூக்கிப் போட்டால் இமயமலைக்குத்தான் போவேன்" என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

தான் பிறந்த மண் கர்நாடகாவில் இருந்தாலும், 44 ஆண்டுகளாக தமிழகத்தில் வாழ்வதால் தான் 'பச்சைத் தமிழன்' என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ரசிகர்களைச் சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் மாவட்ட வாரியாக அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். கடைசி நாளான இன்று ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினிகாந்த், 'தான் தமிழனா?' என்று சமூக வலைதளங்கள் மற்றும் டுவிட்டரில் வெளியாகும் விமர்சனங்கள் வருத்தமளிப்பதாக தெரிவித்தார்.

இதுகுறித்து ரசிகர்களிடையே அவர் பேசுகையில், "எனக்கு 67 வயதாகிறது, 23 ஆண்டுதான் கர்நாடகாவில் இருந்தேன். எஞ்சிய 44 ஆண்டுகள் தமிழ்நாட்டில் உங்கள் கூடவே வளர்ந்தேன். கர்நாடகத்தில் இருந்து மாராட்டியராக வந்திருந்தாலும் பேரும் புகழும் அள்ளிக்கொடுத்து என்னை தமிழனாக்கி விட்டீர்கள். அதனால் நான் பச்சைத் தமிழன்" என்று அவர் சொன்னார்.

"என்னை எங்கேயாவது போ என்று வெளியே தூக்கிப் போட்டால் இமயமலையில் போய்த் தான் விழுவேனே தவிர வேறு மாநிலத்திற்கு போகமாட்டேன். உயிரோடு இருந்தால் தமிழ்நாட்டில் இருக்கவேண்டும் இல்லாவிடில், சிவன் இருக்கும் இமயமலைக்கு செல்லவேண்டும். என்னை வாழ வைத்து அழகு பார்த்த உங்களை விட்டு நான் ஏன் செல்ல வேண்டும்?" என்று ரஜினிகாந்த் கேள்வி எழுப்பினார்.

சென்னை மே 18 - "எதைப் பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள், ஆனால் அதை (அரசியல்) பற்றி மட்டும் கேட்க வேண்டாம்" என்று நடிகர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கேட்டுக் கொண்டார். நடிகர் ரஜினி கடந்த 15-ம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து வருகிறார். 4ம் நாளான இன்று கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கால் மாவட்ட ரசிகர்கள் புகைப்படம் எடுத்தனர். 

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடந்து வரும் ரசிகர்கள் சந்திப்பில், முதல் நாளில் கன்னியாகுமரி, திண்டுக்கல், கரூர் மாவட்ட நிர்வாகிகள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். 2-வது நாளில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள் ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 3வது நாளான நேற்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

4-வது நாளான இன்று கடலூர், தஞ்சாவூர், பாண்டிச்சேரி, காரைக்கல் மாவட்ட ரசிகர்களை ரஜினி சந்தித்து புகைப்படம் எடுத்தார். நாளையோடு முதல் கட்ட சந்திப்பு முடிவடைகிறது. இந்தச் சந்திப்பின் போது ரசிகர்கள் தங்களது குடும்பத்தை கவனித்து கொள்ள வேண்டும், ரசிகர்ளுடனான சந்திப்பு மகிழ்ச்சி அளிக்கிறது, ரசிகர்களுக்கு வயதாகிவிட்டாலும் இன்னும் உற்சாகம் குறையாமல் இருக்கின்றனர், ரசிகர்கள் அனைவரும் தீய பழக்கங்கள் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அப்போது ரஜினியிடம் அரசியல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டப்போது அதற்கு அவர், எதைப்பற்றி வேண்டுமானாலும் கேள்வி கேளுங்கள் பதில் அளிக்கிறேன், ஆனால் அரசியல் பற்றி மட்டும் எதையுமே என்னிடம் கேட்க வேண்டாம் கையெடுத்து கேட்டுக்கொண்டார்.

திருவனந்தபுரம், மே.18- மலையாள நடிகை லெனா, கண்ணாடி துண்டை சர்வ சாதரணமாக கடித்து மென்று சாப்பிடும் வீடியோ வெளியாகி சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மலையாள படங்கள், தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் லெனா. திரைக்கதை ஆசிரியர் அபிலாஷ் குமாரை திருமணம் செய்த அவர் பின்னர் பிரிந்துவிட்டார். கணவரை பிரிந்த லெனா படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

விடியோ: நன்றி - Celebrity Vibez

தனுஷின் 'அனேகன்' படம் மூலம் கோலிவுட் வந்தவர் லெனா. அந்த படத்தில் டாக்டர் ராதிகா என்ற கதாபாரத்தில் நடித்திருக்கிறார். தற்போது அவர் ஒரு தமிழ் படத்திலும் நடித்து வருகிறார்.

லெனா, கண்ணாடி துண்டு ஒன்றை மிகச் சாதாரணமாக கடித்து சாப்பிடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். அந்த வீடியோவை பார்த்தவர்கள் அதிரிச்சி அடைந்தனர்.

கண்ணாடி துண்டை 'பிஸ்கட்' சாப்பிடுற மாதிரி சாப்பிடுகிறாரே என்று பலரும் வியந்தனர். இந்நிலையில் தான் கண்ணாடி துண்டு பற்றி லெனா விளக்கம் அளித்துள்ளார்.

வீடியோவில் நான் சாப்பிட்டது நிஜ கண்ணாடி அல்ல. படங்களில் 'ஆக்சன்' காட்சிகளில் பயன்படுத்தும் கண்ணாடி போன்று இருக்கும் மெழுகு. நான் வெளியிட்ட வீடியோ இந்த அளவுக்கு பரபர்ப்பாகும் என எதிர்பார்க்கவில்லை என்று லெனா தெரிவித்துள்ளார்.

இதனால் கடுப்பேறிய 'நெட்' வாசிகள் 'கன்னபின்னா' என்று லெனாவை வெளுத்து வாங்கிகொண்டிருக்கிறார்கள்.

சென்னை, மே 18- இன்னும் சிறிது நேரத்தில் அடுத்த நிலையத்தைத் தொட்டு விடலாம் என்று காத்திருக்க, செல்ல வேண்டிய பாதையில் செல்லாமல் எதிர்திசை வழித்தடத்தில் ரயில் ஓடியதால் நூற்றுக்கணக்கான பயணிகள் ஒருகணம் திக்குமுக்காடி போயினர் சென்னையில்.

சென்னை சென்ட்ரலிலிருந்து அரக்கோணத்திற்கு மாலை 7 மணியளவில் விரைவு மின்சார ரயில் ஒன்று வழக்கம் போல புறப்பட்டது. வேலை முடியும் நேரம் என்பதால் ரயில் பயணிகள் அதிகம் இருந்தனர். இந்நிலையில், அடுத்த நிலையமான பேசின்பாலத்துக்கு ரயில் சென்றபோது அரக்கோணம் நோக்கி செல்லும் 1வது தணடவாளத்தில் செல்லாமல் கும்மிடிப்பூண்டி நோக்கி வரும் தண்டவாளப் பாதையில் ரயில் சென்றது. 

இதைக் கண்ட மக்கள் பீதி அடைந்து கதறினர். ரயில் பாதை மாறி போவதை அறிந்தும் சமிக்ஞை அந்த பக்கமாக விழுந்ததால் வேறு வழியின்றி ஓட்டுனரும் ரயிலை இயக்கினார். நிலையத்தில் ரயில் நின்றதும் பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர்.

நல்லவேளையாக எதிர்புறம் எந்த ரயிலும் வராததால் விபத்து ஏதும் நடக்கவில்லை. அப்பாதையைப் பயன்படுத்தும் மற்ற இரயில்கள் முந்தைய நிலையங்களிலேயே நிறுத்தப்பட்டன. பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அரக்கோணம் செல்ல இரயில் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு பின்னர் பயணிகள் அதில் ஏறி புறப்பட்டனர். 

பெய்ஜிங், மே.18- தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து சீனாவுக்கு ஆசிரியர் வேலைக்குச் சென்ற தமிழர் ஒருவர், இப்போது அந்நாட்டையே அசத்தி இருக்கிறார். அந்நாட்டு அரசாங்கத்தினால் சிறந்த வெளிநாட்டு ஆசிரியர் என விருது அளித்து அவர் கௌரவிக்கப் பட்டுள்ளார்.

சீனாவிலுள்ள பள்ளி ஒன்றில் கணிதப் பாடம் போதித்து வரும் ஐசக் தேவகுமாருக்கு அளிக்கப்பட்ட இந்த விருது, அவருடைய அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் என்று சீனா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் ஈரோடுக்கு அருகிலுள்ள கிருஷ்ணாம் பாளையம் என்ற கிராமத்தைச் சேர்ந்த தேவகுமார், சீனாவில் சில ஆண்டுகளாக கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் கணிதப் பாடத்தை போதிக்கும் விதம் மாணாவர்களிடம் நல்ல பலனைத் தந்திருப்பதே அவருக்கு இந்த விருது வழங்கப்பட காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மே.17- சென்னை பல்லாவரத்தில் ரூ 30கோடி மதிப்புள்ள நிலத்தை நித்யானந்தா பெயரில் அவரது பிரதான சிஷ்யையான நடிகை ரஞ்சிதா உள்ளிட்டோர் ஆக்கிரமித்து குடிசை போட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  

சென்னையிலுள்ள ஒரு குடியிருப்பு, சாமி நித்யானந்தாவுக்கு சொந்தமானது என நடிகை ரஞ்சிதா, ஆதரவாளர்களுடன் குடியிருப்புவாசிகளிடம் தகராறு செய்துள்ளார்.

சென்னையில் உள்ள பல்லாவரம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 67). இவரும் இவரது உறவினர்களும் அங்குள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனித்தனி வீடுகளில் கடந்த 40 வருடங்களுக்கும் மேலாக வசிக்கின்றனர். இந்த இடம் அரசு புறம்போக்கு கிராம இடம் எனவும், இதன் மதிப்பு 30 கோடி எனவும் கூறப்படுகிறது.

இதனிடையில், ராமநாதன் என்பவர் சில வருடங்களுக்கு முன்னர் இந்த இடம் தனக்கு சொந்தமானது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், உரிய ஆவணங்களை ராமநாதன் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததால் அந்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம், கிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்த குடியிருப்பில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்கியது.

இந்நிலையில், பிரபல சாமியார் நித்யானந்தாவின் சீடர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று நடிகை ரஞ்சிதா தலைமையில் அந்த குடியிருப்பு பகுதிக்கு வந்தனர். 

பின்னர் ரஞ்சிதா, "இந்த இடம் ராமநாதனின் மகளுக்கு சொந்தமானது. அவர் நித்தியானந்தாவின் சீடர் என்பதால் இந்த இடத்தை அவர் பெயருக்கு சாமி எழுதிக் கொடுத்துள்ளார்.  எனவே, நீ உடனே இந்த இடத்தை காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் நடப்பதே வேறு" என கிருஷ்ணனை மிரட்டியுள்ளார்.

பின்னர், சிறிய அளவில் அங்கு குடிசையை அமைத்த நித்யானந்தாவின் ஆள்கள் அவர் புகைப்படத்தை அங்கு வைத்து பூஜை செய்ய தொடங்கியுள்ளனர். இதையடுத்து பல்லாவரம் காவல் நிலையத்தில் இருதரப்பில் புகார் கொடுத்துள்ளதை அயடுத்து போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை, மே 17- தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் இன்று மீண்டும் வருமான வரித்துறை சோதனை நடந்தது. புதுக்கோட்டையில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டில் இந்த சோதனை நடந்துள்ளது. 

கடந்த ஏப்ரல் 7ம் தேதி, விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். சோதனைக்கு பின்னர், அமைச்சர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரை நேரில் வரும்படி வருமான வரி துறை அழைப்பாணை விடுத்தது.

அவர்கள் இருவரும் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ள நிலையில், இன்று மீண்டும் அவரது வீட்டில் சோதனை நடந்தது. முன்பு சோதனை நடத்திய போது சிக்கிய நகை மற்றும் ரொக்கங்கள் யாவும் சீல் வைக்கப்பட்டன. அவற்றை அதிகாரிகள் தற்போது சரி பார்த்து வருவதாக கூறப்பட்டுள்ளது. 

 

கோப்புப் படம்

சென்னை, மே 17- சென்னையில் இன்று காலை முதல் பல இடங்கள் சாரல் மழை பெய்து வருகிறது. மண்டையைப் பிளக்கும் வெயில் வாட்டி கொண்டிருக்க, காலையிலேயே சாரல் மழை பெய்ததால் சென்னை மக்கள் சந்தோசம் கொண்டனர்.

சென்னையில், அக்னி வெயில் கொளுத்தி வருகிறது. மேலூர் போன்ற பல இடங்களில் 100 பாகை பாரன்ஹீட்டுக்கும் மேல் வெயில் வாட்டி வதைக்கிறது. கடும் வெயிலினால் தமிழக மக்கள் வாடி கொண்டிருக்க, காலையிலேயே வானம் மேக மூட்டமாக இருந்தது. பல இடங்கள் சாரல் மழை பெய்து வருகிறது. மயிலாப்பூர், ராயப்பேட்டை, சாந்தோம், எண்ணூர் ஆகிய பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

இது குறித்து அறிக்கை விடுத்துள்ள வானிலை மையம், வெப்பச்சலனத்தால் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறியுள்ளது.   

 

சென்னை, மே 16- ரஜினிகாந்த் அரசியலுக்கு கண்டிப்பாக வருவார். அவரை இனி யாராலும் தடுக்க முடியாது என ஜோதிடர் ஒருவர் கூறியுள்ளார். சிறிது காலம் அரசியல் கணிப்புகளிலிருந்து ஒதுங்கி இருந்த ரஜினியின் அரசியல் பேச்சினால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

"ஒருவேளை நான் அரசியலுக்கு வந்தால் நேர்மையாக இருப்பேன், பணம் சம்பாதிக்க வரமாட்டேன். அந்த எண்ணத்தோடு இருப்பவர்களை அருகில் கூட வைத்துக் கொள்ளமாட்டேன்" என ரஜினி பேசிய பேச்சு தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்களைச் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதும், அரசியல் குறித்து திடீரென வாய் திறந்துள்ளது எல்லாம் ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறிகள் தான் என ஒரு பக்கம் விமர்சனங்கள் எழ, ஜோதிடர் ஒருவர் ரஜினியின் அரசியல் குறித்து கணித்துள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஷெல்வி என்பவர், ரஜினியின் ஜாதகத்தை கணக்கிட்டு அடுத்த ஆண்டு ரஜினி அரசியலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளார். 2018ம் ஆண்டு முதல் 19 வருட காலமாக ரஜினிக்கு இருந்த சனி திசை மாறி, புதன் திசை வருகிறதாம். இதனால், கல்வி சம்பந்தப்பட்ட விசயத்தில் ரஜினி அறக்கட்டளை தொடங்குவார் என்றும் இதன்வழி அவர் அரசியலில் களம் இறங்குவார் என்றும் அவர் கூறியுள்ளார். 

சென்னை, மே 16- முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி வீட்டிலும் 9 பேர் கொண்ட அதிகாரிகள் குழு சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை, நுங்கம் பாக்கத்தில் மட்டுமின்றி டில்லியிலும் சேர்த்து மொத்தம் 14 இடங்கள் சோதனைகள் நடந்து வருகிறன. சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் ஏர் செல் மெக்சிஸ் வழக்கில் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்குவதில் முறைகேடு நடந்ததாக நேற்று சிபிஐ அதிகாரிகள் வழக்கு பதிவு செய்தனர். 

அனுமதி கொடுப்பதற்கு கார்த்தி சிதம்பரம் பல லட்சம் வாங்கியதாக புகார் செய்யப்பட்டதை அடுத்து அவர் மீதும் இந்திராணி, பீட்டர் ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

More Articles ...