தீபிகாவின் 'பத்மாவதி'க்கு விமோசனம்; இம்மாதம் வெளியீடு. உச்ச நீதிமன்றம் அதிரடி!

India
Typography

மும்பை, ஜன.18- தீபிகா படுகோன், ரன்வீர் சிங் மற்றும் ஷாஹிட் கபூர் ஆகியோர் நடிப்பில், பிரபல இந்தித் திரைப்பட இயக்குநர் சஞ்சாய் லீலா பன்சாலியின் கனவுக் காவியமான 'பத்மாவதி' திரைப்படம் ஏகப்பட்ட சிக்கல்களில் சிக்கி, அதனின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தியே. 

இதனிடையில், அந்தப் படத்தை திரையிட வேண்டும் என்றால், அதன் பெயர் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டது. அப்படத்தின் இயக்குநர் சஞ்சாய் பன்சாலி, அப்படத்தின் பெயரை 'பத்மாவத்' என்று மாற்றினார். அதனைத் தொடர்ந்து, அந்தத் திரைப்படத்தை இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் திரையிட உச்ச நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. 

குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் அப்படம் திரையிடப் படாது என்ற தடை உத்தரவும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அந்த நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

சித்தூர் ராணி பத்மினியின் கதை 'பத்மாவதி' என்ற பெயரில் இந்தி உள்ளிட்ட இதர மொழிகளிலும் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு ராஜபுத்திர வம்சத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தியாவின் சில மாநிலங்களில், இந்தப் படத்தை திரையிட தடை விதிக்கப்பட்டது. தணிக்கை வாரியமும் இப்படத்திற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

அதனைத் தொடர்ந்து அத்திரைப்படத்தின் பெயர் 'பத்மாவத்' என்றும், அதில் சில காட்சிகளில் மாற்றம் செய்து சஞ்சாய் பன்சாலி மீண்டும் அதனைத் தணிக்கை வாரியத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் திருப்தி அடைந்த தணிக்கை வாரியம், அத்திரைப்படத்தை வெளியிட அனுமதியை வழங்கியது. 

எதிர்வரும் 25-ஆம் தேதியன்று 'பத்மாவத்' படம் இந்தியா முழுவதும் திரையிடப்படுகிறது. ராஜஸ்தான், குஜராத் மாநில அரசுகள் இந்தப் படத்தை திரையிட தடை விதிக்க உத்தரவிட்டுள்ளன. ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் இப்படத்திற்கு தடைவிதிக்க பரிசீலித்து வந்தன. 

இந்தத் தடையை நீக்க கோரி 'பத்மாவத்' படத்தின் தயாரிப்பாளர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மத்திய தணிக்கை குழுவினர் அனுமதி அளித்த பிறகும் பத்மாவத் படத்துக்கு மாநில அரசுகள் தடை விதிப்பது சட்டவிரோதம். எனவே தடையை நீக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்பட்டது. 

இனிமேற்கொண்டு இத்திரைப்படம் எந்த மாநிலத்திலேயும் தடைச் செய்யப்படக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இவ்விவகாரம் தொடர்பில், எந்த மாநில அரசாங்கமும் எவ்வித அறிவிக்கையும் வெளியிடக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS