அதிபர் டிரம்ப்பின் மகள் இவாங்கா ஹைதராபாத் வந்தார்!

India
Typography

 

ஹைதராபாத், நவ.28- உலகத் தொழில்முனைவர் உச்சநிலை மாநாட்டிற்காக  அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மகளும் அவரது ஆலோசகருமான இவாங்கா டிரம்ப், இன்று ஹைதராபாத் வந்து சேர்ந்தார்.

பலத்த பாதுகாப்புக்கு இடையே இந்தியா வந்து சேர்ந்த இவாங்காவை  வெளியுறவு அமைச்சின் முக்கிய அதிகாரிகள் இங்குள்ள ராஜீவ் காந்தி அனைத்துலக விமானநிலையத்தில்  வரவேற்றனர்.    

இந்த உலகத் தொழில் முனைவர்களின் உச்சநிலை மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் இவாங்காவும் முக்கிய உரை நிகழ்த்தவுள்ளனர்.   

அமெரிக்கக் குழுவுக்கு தலைமையேற்றிருக்கும் இவாங்கா இந்த மாநாடு பற்றிக் குறிப்பிட்ட போது திறன் பயிற்சிகள் மற்றும் கல்வி வழி வேலைத்திறன் கொண்ட சமுதாயத்தில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது குறித்து இந்த மாநாட்டில் தாம் விவாதிக்கப் போவதாக  அவர் சொன்னார்.

இந்தியாவும் அமெரிக்காவும் சேர்ந்து முதல் முறையாக இந்த மாநாட்டை நடத்துகின்றன. இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவில் இது புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

BLOG COMMENTS POWERED BY DISQUS