மலேசியாவில் இருந்து மணல்  இறக்குமதி; கேரளா முடிவு!

India
Typography

 திருவனந்தபுரம், செப்.20- மலேசியா, வியட்னாம் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளில் இருந்து ஆற்று மணல் இறக்குமதி செய்வதை அனுமதிக்கக் கேரளா மாநில அரசு முடிவு செய்துள்ளது. 

முதலமைச்சர் பினாராயி விஜயன் தலைமையில் நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் நிலவும் மணல் பற்றாக்குறையை, மலேசியா போன்ற நாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்வதன்வழி தீர்க்கமுடியும் என்று மாநில அரசு  கருதுகிறது.  

மணல் பற்றாக்குறை விளைவாக, கேரள ஆறுகளில் மணல் எடுக்கும் நிலை, சுற்றுச் சூழலுக்குக் கடும் பாதிப்பை ஏற்படுத்துவதாகக் கூறப்பட்டது.

கொச்சி துறைமுகம் வழி மணல் இறக்குமதி செய்வதற்கு மத்திய அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த இறக்குமதிக்கு சட்ட ரீதியாகவும் எத்தகைய தடைகளும் கிடையாது என்று மாநில அரசின் உயர்நிலைக் கூட்டதில் தெரிவிக்கப்பட்டது.

மணல் இறக்குமதி செய்ய விரும்புவோருக்கு மாநில அரசாங்கத்தின் சுரங்க மற்றும் புவியியல் இலாகா அவசியமான பர்மிட்டுகள் வழங்கும்.

மாநிலத்தில் கட்டுமானத்திற்கு உதவக்கூடிய தரத்திலான மணலின் தேவை 3 கோடி டன்களாகும். இதில் மிகக் குறைந்த அளவையே உள்நாட்டில் ஈடு செய்ய முடிகிறது. இதனால், மணல் பற்றாக்குறை மிகக் கடுமையாகிவிட்டது.

மணல் விலையும் உச்சக் கட்டத்தில் உள்ளது. கேரள கட்டுமானத் தொழில்துறை இதனால் கடும் நெருக்குதலில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS