இந்தியாவின் புதிய அதிபர் யார்?  இன்று வாக்குப்பதிவு தொடங்கியது 

India
Typography

  புதுடில்லி, ஜூலை.17-  இந்திய அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு, இன்று காலை தொடங்கி நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதிபர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, அதிபரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 

இதில் ஆளும் பாரதிய ஜனதா சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீரா குமாரும் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் நாடாளுமன்ற இரு அவைகளின் உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்கின்றனர்.

தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஒரு எம்.பி.யின் ஓட்டு மதிப்பு 708 ஆகும். ஆனால் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டின் மதிப்பு, அந்தந்த மாநில மக்கள் தொகைக்கு ஏற்ப மாறுபடும். 

இன்று காலை 10 மணிக்கு தொடங்கிய ஓட்டுப் பதிவு, டில்லியில் நாடாளுமன்ற வளாகத்திலும், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகத்திலும், இதே போன்று பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்களிலும் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, நாடு முழுவதும் மொத்தம் 32 வாக்குச்சாவடிகளில் நடைபெற்று வருகிறது.  

டில்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்தார். அதனை தொடர்ந்து எம்.பி.க்கள் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.  

தமிழக சட்டசபை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தமிழக முதல்-அமைச்சர் பழனிசாமி முதல் வாக்கை பதிவு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அதிபர் தேர்தலில் ராம்நாத் கோவிந்த் வெற்றி பெற்று  பொறுப்பேற்பார் என்றார். 

இந்நிலையில், உடல்நிலையை கருத்தில் கொண்டு, திமுக தலைவர் கருணாநிதி வாக்களிக்க முடியாத சூழ்நிலை உள்ளதால், அவர் வாக்களிக்க மாட்டார் என திமுக அறிவித்துள்ளது. 

மேலும், இந்தத் தேர்தலில், ஆளும் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் ராம்நாத் கோவிந்த்கே வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருதப்படுகிறது.    

BLOG COMMENTS POWERED BY DISQUS