Top Stories

திருநெல்வேலி, மார்ச் 24- தங்க நகை விற்கும் கடையின் மேற்கூரையைத் துளையிட்டு உள்ளே இறங்கிய திருடர்கள் 60 கிலோ தங்கத்தைக் கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை சம்பவம் பாளையங்கோட்டையில் நடந்தது.

முருகன் குறிஞ்சியில் உள்ள அழகர் தங்க கடையில் இரவு நேரத்தில் உள்ளே நுழைந்த திருடர்கள் அங்கு இருந்த பல வகையான நகைகளைத் திருடிச் சென்றுள்ளனர். கொள்ளையடிக்கப்பட்ட நகை மட்டும் 60 கிலோ என கூறப்படுகிறது.

கொள்ளை நடந்த கடைக்கு அருகில் ஒரு கட்டடம் கட்டும் பணி நடந்து வருகிறது. அதில் வேலைச் செய்பவர்கள் யாரும் கொள்ளையில் ஈடுப்பட்டுள்ளார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகையின் மொத்த மதிப்பு ரூ.16 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை, மார்ச்.24- தமிழ் எழுத்துலகில் மிகுந்த ஆளுமைப்பெற்ற  எழுத்தாளரான அசோகமித்திரன் தமது 85ஆவது வயதில் காலமானார். ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்றிரவு 8 மணியளவில் வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டில் மயங்கி விழுந்து உயிர்நீத்தார்.

தியாகராஜன் எனும் இயற்பெயரைக் கொண்ட அவர் 1931ஆம் ஆண்டு செகந்திரபாத்தில் பிறந்தார். 1952ஆம் ஆண்டு சென்னைக்கு புலம்பெயர்ந்த இவர், ஜெமினி திரைப்பட நிறுவனத்தில் பணியாற்றினார். பிறகு 1966-ஆம் ஆண்டில் சிறுகதை மற்றும் நாவல் எழுதுவதை முழுநேர பணியாகத் தொடர்ந்தார். இவருடைய படைப்புக்கள் ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு மற்றும் பல ஐரோப்பிய மொழிகளுக்கு மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரின் எழுத்துக்களைப் பாராட்டி தமிழக அரசு 3 முறை விருது வழங்கி கவுரவித்தது. 1977ஆம் ஆண்டு மற்றும் 1984ஆம் ஆண்டுகளில் இலக்கிய சிந்தனை விருது மற்றும் 2007ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் விருதினையும் பெற்றார். ‘அப்பாவின் சிநேகிதர்’ எனும் இவரின் சிறுகதை தொகுப்பு 1996ஆம் ஆண்டில் ‘சாகித்யா அகாடமி’ விருதை வென்றது.

சென்னை, மார்ச் 23- ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட பன்னீர்செல்வம் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, சசிகலா தரப்பிற்கு தொப்பி சின்னம் தரப்பட்டுள்ளது.

அதிமுகவின் பெயரையும் சின்னத்தைத் தேர்தலில் பயன்படுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவித்து அதனை முடக்கியது. இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் சசிகலா தரப்பிற்கு வேறு என்ன சின்னம் மற்றும் பெயர் ஒதுக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.

ஓபிஎஸ் தரப்பு தங்களுக்கு ஆட்டோ, தொப்பி, கிரிக்கெட் சின்னம் வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு இரட்டை விளக்கு மின்கம்பம், இரட்டை விளக்கு ஆகிய சின்னங்களைக் கோரியது.

இதனையடுத்து, இவர்களுக்கான சின்னத்தை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்தது. அதில், ஓபிஎஸ் தரப்பிற்கு இரட்டை விளக்கு மின்கம்பமும் சசிகலாவிற்கு தொப்பி சின்னமும் வழங்கப்படுவதாக அறிவித்தது. 

மேலும், ஓபிஎஸ் தரப்பு 'அதிமுக புரட்சித் தலைவி அம்மா' என்ற பெயரிலும் சசிகலா தரப்பு 'அதிமுக அம்மா' என்ற பெயரிலும் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. 

விஜயவாடா. மார்ச் 24- அமெரிக்கா, நியூ ஜெர்சியில் வசித்து வந்த இந்தியாவைச் சேர்ந்த அம்மாவும் 7 வயது மகனும் கொலைச் செய்யப்பட்டு கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்கள் இருவரும் ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சியில் மென்பொருள் நிபுணர்களாக வேலைச் செய்து வந்தனர் சசிகலாவும் (வயது 40) அவரது கணவர் ஹனுமந்தாவும். இவர்களுக்கு 7 வயதில் அனிஷ் சாய் என்ற மகன் இருந்தான். இவர்கள் கடந்த 9 வருடங்களாக நியூ ஜெர்சியிலேயே தங்கி வேலைச் செய்து வந்தனர். 

சசிகலாவும் மென்பொருள் நிபுணர் என்றாலும் அவர் வீட்டில் இருந்த தனது வேலையைக் கவனித்து வந்தார். இந்நிலையில், ஹனுமந்தா ராவ் நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பியபோது வீட்டில் தனது மனைவியும் மகனும் கொலைச் செய்யப்பட்டு கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். 

சம்பவத்தை விசாரித்த போலீசார், அம்மாவும் மகனும் கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். 

அண்மைய காலமாக அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவழியினர் கொல்லப்பட்டு வருவது இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் கடந்த மாதம், தெலுங்கானாவைச் சேர்ந்த ஶ்ரீநிவாஸ் எனும் பொறியிலாளர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மும்பை, மார்ச்.24- விமானத்தில் இருக்கைப் பிரச்சனையினால் வாக்குவாதத்தில் ஈடுபட்டு விமான பணியாளரின் கண் கண்ணாடியை உடைத்து, சட்டையைக் கிழித்து 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா கட்சியின் எம்பி ரவிந்திரா கெய்க்வாட், இனி எந்த 'ஏர் இந்தியா' விமானத்திலும் பயணிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அவர் மீது போலீஸ் புகாரும் அளித்தது ஏர் இந்தியா நிறுவனம். இந்தச் சம்பவம் எல்லா எம்பிக்களுக்கும் மிகவும் அவமானத்திற்குரியது எனப் பலரும் ரவிந்திராவுக்கு கண்டனம் தெரிவித்தனர். அவர் இதற்கு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் பலர் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

புனேயிலிருந்து புதுடில்லிக்கு சென்ற 'ஏர் இந்தியா ஏஐ 852' விமானத்தில் நேற்று இச்சம்பவம் நடந்தது. அவர் வைத்திருந்த பயண டிக்கெட் வேறொரு பயணத்திற்கு உரியது.

ஆனால், அதில் பயணிக்காமல் இந்த விமானத்தினுள் அவர் நுழைந்துள்ளார். முதல் வகுப்பு டிக்கெட் வைத்திருந்த இவருக்கு இரண்டாம் வகுப்பு இருக்கை அளிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்தார். உண்மையில் அந்த விமானத்தில் முதல் வகுப்பு பயண வசதியே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

புதுடில்லி சென்றடைந்த பின்னர் இறங்குமாறு கோரியும் அந்த விமானத்தை விட்டு இறங்காமல் ஒரு மணிநேரம் அங்கேயே அமர்ந்திருந்தார் ரவிந்திரா. இதனால் இவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த விமான பணியாளர், பிரதமர் நரேந்திர மோடியிடம் புகார் அளிப்பேன் என்று கூறினார். 

இதைக் கேட்டு கோபமுற்ற ரவிந்திரா, அந்த விமான பணியாளரின் கண் கண்ணாடியை உடைத்து, சட்டையைக் கிழித்து, காலணியால் 25 முறை அடித்துள்ளார். இதற்கு சிறிதும் வருந்தாத ரவிந்திரா உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியிலும் இதைப் பற்றிக் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து பலமுறை விமானப் பயணிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் இது உச்சக்கட்டமாக இருப்பதாகவும் இதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்றும் பயணிகளும் விமான பணியாளர்களும் தங்களுக்கு நிகழும் பிரச்சனைகளை இந்தக் குழுவிடம் முறையிடலாம் என்றும் பொதுவிமான போக்குவரத்து அமைச்சர் அஷோக் கஜபதி ராஜூ தனது டிவிட்டரில் கூறியுள்ளார்.

ஹூப்ளி, மார்ச் 24- கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் நான்கு கர்ப்பிணி பெண்களைப் படுக்கும் வகையிலான ஒற்றை தள்ளு வண்டியில் கொண்டு சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் காணொளி தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது.

கர்நாடகா, ஜுப்ளி பகுதியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் நேற்று காலை கர்ப்பிணி பெண்கள் சிலர் தங்களது வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு வந்திருந்தனர். அப்போது, அவர்களை ஸ்கேன் செய்வதற்காக ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு ஊழியர்கள் கொண்டுச் சென்றனர். 

   ###காணொளி: நன்றி டிவி9 கர்நாடகா

வழக்கமாக, படுக்கும் வகையிலான தள்ளு வண்டியில் வைத்து தான் அவர்களை மற்ற பகுதிக்கு தள்ளி செல்வர். ஆனால், நேற்று பரிசோதனைக்கு வந்திருந்த நான்கு கர்ப்பிணி பெண்களையும் மருத்துவமனை ஊழியர் ஒருவர் ஒரே தள்ளு வண்டியில் அமர வைத்து கொண்டுச் சென்றார். அவர்களை மின்தூக்கியில் ஏற்றி செல்ல இவ்வாறு செய்யப்பட்டது.

இதனை யரோ இருவர் காணொளியாக படம் எடுத்து, அதை இணையத்தில் வெளியிட்டார். காணொளியைப் பார்த்த பொதுமக்கள் இச்செயலை வன்மையாக கண்டித்தனர். இச்சம்பவத்திற்கு காரணம் வண்டி பற்றாக்குறையா அல்லது ஊழியர்களின் சோம்பேறி தனமா என்றும் கேள்வி எழுப்பினர். 

இதனையடுத்து, மருத்துவமனை மீது புகார் செய்யப்படவே, மருத்துவமனை நிர்வாகம் மூன்று ஊழியர்களைப் பணி இடைநீக்கம் செய்தது. 

Advertisement