1,700 ஆண்டுக்கு முந்தைய 48 அடி புத்தரின் சிலை கண்டுபிடிப்பு!

ஆன்மீகம்
Typography

 

இஸ்லாமாபாத், நவ.18- பாகிஸ்தானின் ஹரிப்பூர் மாவட்டத்தில் பாமலா ஸ்துபா என்ற பகுதியில் 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமை வாய்ந்த புத்தரின் சிலையை அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

துயில் நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலையுடன், புத்த சமயம் சார்ந்த 500க்கும் அதிகமான புராதனப் பொருள்களையும்ஆய்வாளர்கள் தோண்டி  இங்கிருந்து எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர்- பாத்தூன்கவா பகுதியிலுள்ள ஹரிப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அகழ்வாய்வுகளை நிபுணர்கள் நடத்தி வருகிறார்கள். சுமார் 48 அடி நீளம் கொண்ட இந்தச் சிலை 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். எனவே, இதுதான் உலகின் பழமையான புத்தராக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹரிப்பூர் தான் பாகிஸ்தானிய புத்த சமயத்தின் அடிப்படைத் தளமாக இருந்திருக்கக்கூடும் என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் அப்துல் சமாட் தெரிவித்தார். கிட்டத்தட்ட மௌரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான அசோகர் காலத்தியத்தோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றார் அவர்.

இந்தப் பகுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றின் மிக முக்கிய கூறாக இப்பகுதி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளையில் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, சமயச் சுற்றுலாவுக்கான ஒரு தளமாக மாற்றப்படவேண்டும். இதனால் உலகளவில் புத்த சமயத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொள்ள வழி பிறக்கும் என்று முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான இம்ரான் கான் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அகழ்வாய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தத் தளங்கள், பாகிஸ்தானின் சமயத் தீவிரவாதிகளால் சேதப்படுத்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS