திருச்சி, டிச.29- வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் கடவுள் தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகளும் அங்குச் செய்யப்பட்டுள்ளன. 

ஸ்ரீரங்க ரெங்கநாதர் கோவில், பூலோகத்தின் வைகுண்டம் என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை ரெங்கநாதர் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சனை மண்டபத்தில் எழுந்தருளி வருகிறார்.  

வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது. 

இதனிடையில், நேற்று அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் பெருமாள் அலங்கரிக்கப்பட்டு காட்சியளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

சொர்க்கவாசல் திறப்பின்போது, கடவுள் தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் கோவிலின் வளாகத்திற்குள் ஆரியபடாள் வாசல் அருகில் இரும்பினால் ஆன சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

இதேபோல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சிகள் வெகு விமர்சையாக நடைபெற்றன. 

சபரிமலை, டிசம்.15- சபரிமலைக்கு பக்தர்கள் பல்வேறு திசைகளிலும் இருந்து வந்த வண்ணம் இருக்கும் இந்தத் தருணத்தில், சபரிமலை படிப் பூஜைகளின் சிறப்பு என்ன? என்று தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமானது அல்லவா..!

இந்த 18 படிகளும் 18 தெய்வங்களுக்கு உரியவை. இந்த 18 படிகளையும் பூக்களாலும் தீபங்களாலும் அலங்கரித்து அவற்றுக்குக் கீழே 18 ஆம் படியேறும் இடத்தில் பிரதான தந்திரி 18 வெள்ளிக் கலசங்களை வைத்துப் படி பூஜைகள் செய்வார்.

ஒவ்வொரு படியிலும், படிப் பூஜை மற்றும் மூர்த்தி பூஜையும் நடைபெறும். பின்னர் 18 படிகளிலும் கலசப் பூஜைகள் நடத்தப்படும். தேஙகாயை இரண்டாக உடைத்து, அதன் மூடியில் நெய்விளக்கு ஏற்றி தீபராதனை செய்வார்கள். 18 படிகளும் வெள்ளி மற்றும் வெண்கல விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நைவேத்தியம் நடந்த பிறகு பிரசன்னப் பூஜை செய்யப்படும்.

தொடர்ந்து கற்பூர ஜோதியேற்றி தீபாராதனைகள் காட்டப்பட்டு பிரதான தந்திரியும் மேல்சாந்தியும் சில குறிப்பிட்ட பக்தர்களும் படியேறிச் செல்வார்கள். பிறகு சந்நிதானத்தில் ஐயப்பனுக்கு அரவணைப்பாயாசம் நைவேத்தியம் செய்து தீபம் காண்பிப்பார்கள்.

சபரிமலையின் 18 படிகளிலும் உறைந்திருக்கும் தெய்வங்கள் யாவை என்பதை இங்கு காண்போம்:

1) ஆம் படி -சூரியன்

2) ஆம் படி -சிவன்

3) ஆம் படி -சந்திரன்

4) ஆம் படி -பராசக்தி

5) ஆம் படி -செவ்வாய்

6) ஆம் படி -முருகன்

7) ஆம் படி -புதன்

8) ஆம் படி -விஷ்ணு

9) ஆம் படி -குரு

10) ஆம் படி -பிரம்மா

11) ஆம் படி -சுக்கிரன்

12) ஆம் படி -லட்சுமி

13) ஆம் படி -சனீஸ்வரன்

14) ஆம் படி -எமன்

15) ஆம் படி -ராகு 

16) ஆம் படி -சரஸ்வதி

17) ஆம் படி -கேது

18) ஆம் படி -விநாயகர்

-இதில் முக்கியமாக கவனிக்கத்தக்க அம்சம் ஒன்று உண்டு. அதாவது ஒற்றைப் படை வரிசை வரும் போதெல்லாம் அங்கே நவக்கிரகங்கள் இடம் பெற்றிருக்கும். அதேவேளையில் இரட்டைப் படை வரிசை வரும் போதெல்லாம் குடும்ப தெய்வங்கள் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இஸ்லாமாபாத், நவ.18- பாகிஸ்தானின் ஹரிப்பூர் மாவட்டத்தில் பாமலா ஸ்துபா என்ற பகுதியில் 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமை வாய்ந்த புத்தரின் சிலையை அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

துயில் நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலையுடன், புத்த சமயம் சார்ந்த 500க்கும் அதிகமான புராதனப் பொருள்களையும்ஆய்வாளர்கள் தோண்டி  இங்கிருந்து எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர்- பாத்தூன்கவா பகுதியிலுள்ள ஹரிப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அகழ்வாய்வுகளை நிபுணர்கள் நடத்தி வருகிறார்கள். சுமார் 48 அடி நீளம் கொண்ட இந்தச் சிலை 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். எனவே, இதுதான் உலகின் பழமையான புத்தராக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹரிப்பூர் தான் பாகிஸ்தானிய புத்த சமயத்தின் அடிப்படைத் தளமாக இருந்திருக்கக்கூடும் என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் அப்துல் சமாட் தெரிவித்தார். கிட்டத்தட்ட மௌரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான அசோகர் காலத்தியத்தோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றார் அவர்.

இந்தப் பகுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றின் மிக முக்கிய கூறாக இப்பகுதி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளையில் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, சமயச் சுற்றுலாவுக்கான ஒரு தளமாக மாற்றப்படவேண்டும். இதனால் உலகளவில் புத்த சமயத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொள்ள வழி பிறக்கும் என்று முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான இம்ரான் கான் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அகழ்வாய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தத் தளங்கள், பாகிஸ்தானின் சமயத் தீவிரவாதிகளால் சேதப்படுத்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கோலாலம்பூர்,அக்.9- சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் உருவாகியுள்ள பூச்சோங் ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை தொடர்ச்சியாக சிறப்புப் பூஜைகள் நடந்து வருகின்றன.

பூச்சோங் வட்டாரத்திலேயே பிரமாண்டமாக அமைந்துள்ள ஒரே விஷ்ணு ஆலயம் இவ்வாலயம்தான். புரட்டாசி மாதம் என்பது தெய்வீக மாதம். இம்மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு அவதார திருநாளாகும். ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சந்தான கிருஷ்ண பூஜை நடைபெறுகிறது.

புரட்டாசி நான்கு சனிக்கிழமைகளில் இரவு ஸ்வாமி வாகனங்களில் விசேஷ அலங்காரத்துடன் புறப்படும், இராஜ உபசார பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் தீராத வினைகளைத் தீர்க்கும் பெருமாளாக பக்தர்கள் வேண்டிய வரங்களை அருளி வரம் தரும் பெருமாளாக அருள் புரிகின்றார்.

அவருக்குப் பிரியமான இந்த மாதத்தில் அவரை தரிசித்தும், உபயங்கள், அன்னதானம் எடுத்தும் எம்பெருமாள் ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாளை வணங்கினால் நல்லதே நடக்கும். மேல் விவரங்களுக்குப் பக்தர்கள் 016-6379180 அல்லது 016-9166321 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

More Articles ...