ஈப்போ: 3 பள்ளியில் 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்; H1N1 பாதிப்பா?

சுகாதாரம்
Typography

ஈப்போ, மார்ச் 10- சளி, காய்ச்சல் நோய்களுக்கு ஆளான மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 216 மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பருவ மாற்றத்தினால் உண்டான சாதாரண சளி, காய்ச்சல் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

முன்னதாக இவர்களுக்கு பன்றி காய்ச்சலான எச்1என்1 எனும் தொற்றுநோய் ஏற்பட்டதாக செய்திகள் பரவியதை மறுத்தார் பேரா சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மா ஹங் சூன். 

பெண்கள் பள்ளியான ராஜா பெரெம்புவான் தாயாவைச் சேர்ந்த 129 மாணவர்களும் துங்கு அப்துல் ரஹ்மான் பள்ளியைச் சேர்ந்த 84 மாணவர்களும் கிளேபாங் தேசிய பள்ளியைச் சேர்ந்த 3 மாணவர்களும் தற்காலிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து மாணவர்களும் தத்தம் ஆசிரமங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், கிளேபாங் மாணவர்கள் தங்களின் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பேரா சுகாதார இலாகா தொடர்ந்து மாணவர்களைக் கண்காணித்து வருவதாகவும் பருவ மாற்றத்தினால் ஏற்பட்ட சாதாரண சளி காய்ச்சல் இது எனவும் டத்தோ மா கூறினார். ஆசிரமத்தில் தங்கியிருக்கும் மாணவர்களைக் காண அவர்களின் பெற்றோர்கள் கூட அனுமதிக்கப்படவில்லை எனவும் அவர் கூறினார். 

தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர் என செய்தி வெளியானதைப் பற்றி கருத்துரைத்த டத்தோ மா, இதுபோன்ற வதந்திகளைப் பொதுமக்கள் நம்பக்கூடாது என்றும் அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பகிரவேண்டும் எனவும் கூறினார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS