பினாங்கு வெள்ளம்; பரவக்கூடிய நோய்கள்! அமைச்சு எச்சரிக்கை!

சுகாதாரம்
Typography

 

கோலாலம்பூர், நவ.7- பினாங்கு, கெடா மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பல்வித நோய்கள் பரவக்கூடும் என்றும், சுத்தம் பேணிக் காக்கப்படவில்லை என்றால், அதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அழுக்கு மற்றும் அசுத்தமான வெள்ளநீரினால், வயிற்றுப்போக்கு (diarrhoea), தைபாய்டு (typhoid), ஹெப்படைடிஸ் ஏ (hepatitis A), மற்றும் ஆகிய நோய்கள் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ள நீரின் காரணமாக, தோல், கண்கள், காதுகள், மூக்கு மற்றும் தொண்டைப் புண்கள் ஏற்படக்கூடும் என்று அறிக்கை ஒன்றின் வாயிலாக நோர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். 

இதலால் ஏற்படும் காயங்களுக்கு, உடனடி சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், அதன் தீவிரம் அதிகமாகும் என்று அவர் எச்சரித்தார். குறிப்பாக, சிறுவர்கள், வயது முதிந்தவர்கள் மற்றும் பலநாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். 

வெட்டுக் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, அதற்கு தகுந்த பாதுகாப்பான உடைகளை அணிந்துக் கொள்வது சிறந்தது. வெள்ள நீருடன் நேரிடை தொடர்பு ஏற்பட்டால் வாய்ப்புண்களும் ஏற்படும். 

அதனைத் தவிர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுங்கை பூலோ மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் கிரிஸ்தோபர் லீ கூறினார். 

உடலில் எப்பகுதியிலாவது வெட்டுக் காயங்களோ அல்லது புண்களோ ஏற்பட்டிருந்தால், அவற்றில் வெள்ள நீர் பட்டால், உடனே அப்பகுதிகளை சுத்தமான நீரைக் கொண்டு அலம்ப வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 

வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS