'ரேபிஸ்' பரவும் பகுதிகளில் நாய் கடித்தால் மட்டுமே தடுப்பூசி! -டாக்டர் சுப்ரா 

சுகாதாரம்
Typography

கோலாலம்பூர், ஜூலை.25-  ரேபிஸ் நோய்க் கிருமிகள்  பரவும் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள நாய்கள் யாரையாவது கடித்தால் மட்டுமே அவருக்கு ரேபிஸ் தடுப்பூசி போடவேண்டியது அவசியம் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.

ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க அரசாங்கம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளவதாக அவர் சொன்னார். அரசாங்கம் கையிருப்பில் வைத்திருந்த 8,000 ரேபிஸ் தடுப்பூசி மருந்துகளில் 2,000 தடுப்பூசி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு விட்டதாக அவர் தெரிவித்தார். இதுவரை தடுப்பூசி போடப்பட்ட சுமார் 17,800 விலங்குகளில் பெரும்பாலானவை உள்நாட்டு விலங்குகளே ஆகும். 

மேலும், ரேபிஸ் நோய்க் கிருமிகள் பரவும் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்படாத பகுதிகளில் உள்ள நாய்கள் கடித்தால், உடனே தடுப்பூசி போடப்படப் படமாட்டாது. மாறாக, மருத்துவரின் ஆலோசனைப் படி அதற்கு ஏற்றவாறுதான் சிகிச்சை வழங்கப்படும். அறிவியல் ஆதாரங்கள் மற்றும் பொது செயல்முறை திட்டத்தின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

சரவாக்கில் மொத்தம் 20 இடங்கள் ரேபிஸ் நோய்க் கிருமிகள் பரவும் பகுதியாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளிலும், அதிலும் குறிப்பாக கூச்சிங்கில் ரேபிஸ் நோய்க் கிருமி பரவுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது என அவர் எச்சரித்தார்.

ரேபிஸ் நோய் பரவாமல் தடுக்க சரவாக் அரசாங்கம் அரசு சாரா அமைப்புகளுடன் இணைந்தும் செயல்பட்டு வருகின்றது. அது மட்டுமல்லாமல், அரசியல் பிரச்சனைகளை ஒதுக்கி வைத்து விட்டு எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் இந்த பிரச்சனைக்குத் தீர்வு காணலாம் என்று டாக்டர் சுப்பிரமணியம் கூறினார். 

BLOG COMMENTS POWERED BY DISQUS