தூக்கத்தில் பற்களை 'நறநற'ன்னு  கடிப்பிங்களா? அப்ப, இதப் படிங்க முதல்ல..!

சுகாதாரம்
Typography

 

லண்டன், ஜூலை.17- இரவு நேரத் தூக்கத்தில் பற்களை நறநறவென கடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்குத் தலைவலி, பல் தேய்மானம், ஈறுகளில் புண் என பல்வேறு தொந்தரவுகள் ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இரவில் தூங்கும் போது பல் கடித்தால் பழக்கம் உண்டு. ஆனால், நாம் பொதுவாக அதனை பெரிதாக கண்டு கொள்வதில்லை. ஆனால், அது உடலில் பல்வேறு வகையான நோய்களை உருவாக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

குறிப்பாக, குழந்தைகள் இப்படி செய்வதை பெற்றோர்கள் உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளிக்கவேண்டும் என்றும் பள்ளி ஆசிரியர்கள் இது குறித்த விழிப்புணர்வை குழந்தைகளுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

இது தொடர்பாக பிரசித்திபெற்ற மருத்துவ இதழ் ஒன்று ஆய்வு கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில், 13 வயது முதல் 15 வயது வரை உள்ள மாணவ, மாணவியர்தான் 4 மடங்கு அதிகமாக இரவில் பற்களை கடிக்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றனர் என்ற தகவலை வெளியிட்டுள்ளது.

தூக்கத்தில் பல் கடிப்பதால், தலைவலி, பல் தேய்மானம், தூக்கமின்மை, ஈறுகளில் புண் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேல் மற்றும் கீழ் தாடைகளில் உள்ள பற்களை ஒன்றாக அழுத்துவதால், பல் கூச்சம், பற்கள் உடைதல், பற்கள் விழுதல், முகம் மற்றும் தாடையில் வலி ஏற்படுதல் போன்ற பிரச்சனைகளை அதிகரிக்கும்.

ஆனால், பயப்பட ஒன்றுமில்லை என்றும் சிறப்பான சிகிச்சைகள் உள்ளன என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். கார்டு அல்லது ஸ்ப்ளிண்ட் ஆகிய கடினமான பிளாஸ்டிக் உபகரணத்தைப் பற்களில் பொருத்துவதன் மூலம் பற்கள் கடிப்பதைத் தடுக்கமுடியும். 

தூக்கத்தின் போது, மூச்சுத் திணறல், குறட்டை விடுதல் உள்ளிட்ட பிரச்சனைகளும் பற்களை கடிக்கும் பழக்கத்தை உண்டாக்குமாம். புகைப் பழக்கம், மது உட்கொள்ளுதல், மன அழுத்தம் போன்றவையும் பற்களைக் கடிக்கும் பிரச்சனை உருவாக்கும்  என்கிறார்கள் மருத்துவர்கள்.

 

BLOG COMMENTS POWERED BY DISQUS