கோலாலம்பூர், டிச.15- இலாப நோக்கமற்ற சுகாதாரக் காப்புறுதித் திட்டத்தின் முதற்கட்ட நடவடிக்கையில் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் கூறினார்.  

இந்தக் காப்புறுதி திட்டம், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு மிகவும் அவசியமாக அமைவதால், அவர்கள் இந்த முதற்கட்ட நடவடிக்கையில் உட்படுத்தப்படுகின்றனர் என்று டாக்டர் சுப்பிரமணியம் விளக்கினார். 

"முதற்கட்ட நடவடிக்கைக்குப் பின்னர், இதர வர்க்கத்தினரை தேர்வு செய்து, அதன் பின்னர் அவர்களும் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படுவர். இந்தச் சுகாதார காப்புறுதித் திட்டம் திறம்பட செயல்பட வேண்டும் என்ற அடிப்படையில், இதனை முறையாக செயல்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது" என்று குனோங் ராபாட் ஆரம்பத் தமிழ்ப் பள்ளியின் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் சொன்னார். 

நாட்டின் தனியார் மருத்துவச் சிகிச்சைகள் நியாயமான விலையில் கிடைக்கப் பெறவேண்டும் என்ற அடிப்படையில், இந்தக் காப்புறுதி திட்டம் அமல்படுத்தப் படுகிறது என்று டாக்டர் சுப்பிரமணியம் கடந்த மே மாதம் தெரிவித்தார்.  

 

 

கோலாலம்பூர், நவ.7- பினாங்கு, கெடா மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பல்வித நோய்கள் பரவக்கூடும் என்றும், சுத்தம் பேணிக் காக்கப்படவில்லை என்றால், அதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அழுக்கு மற்றும் அசுத்தமான வெள்ளநீரினால், வயிற்றுப்போக்கு (diarrhoea), தைபாய்டு (typhoid), ஹெப்படைடிஸ் ஏ (hepatitis A), மற்றும் ஆகிய நோய்கள் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ள நீரின் காரணமாக, தோல், கண்கள், காதுகள், மூக்கு மற்றும் தொண்டைப் புண்கள் ஏற்படக்கூடும் என்று அறிக்கை ஒன்றின் வாயிலாக நோர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். 

இதலால் ஏற்படும் காயங்களுக்கு, உடனடி சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், அதன் தீவிரம் அதிகமாகும் என்று அவர் எச்சரித்தார். குறிப்பாக, சிறுவர்கள், வயது முதிந்தவர்கள் மற்றும் பலநாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். 

வெட்டுக் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, அதற்கு தகுந்த பாதுகாப்பான உடைகளை அணிந்துக் கொள்வது சிறந்தது. வெள்ள நீருடன் நேரிடை தொடர்பு ஏற்பட்டால் வாய்ப்புண்களும் ஏற்படும். 

அதனைத் தவிர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுங்கை பூலோ மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் கிரிஸ்தோபர் லீ கூறினார். 

உடலில் எப்பகுதியிலாவது வெட்டுக் காயங்களோ அல்லது புண்களோ ஏற்பட்டிருந்தால், அவற்றில் வெள்ள நீர் பட்டால், உடனே அப்பகுதிகளை சுத்தமான நீரைக் கொண்டு அலம்ப வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 

வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கோலாலம்பூர், நவ.3- அதிக நேரம் கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு, சுகாதார அமைச்சு நீண்டகால தீர்வு ஒன்றை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தான் மருத்துவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று விதிமுறை அமலில் இருந்த போதிலும், இது மேலும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில், முறையான அமைப்பு இருந்தால் நல்லது என்று சுகாதார அமைச்சு கருதுவதாக சுப்பிரமணியம் மேலும் கூறினார். 

"அவசர அழைப்புகளின் கீழ் பணியில் அமர்த்தப்படும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான ஓய்வை வழங்கும் அதிகாரத்தை சுகாதார அமைச்சு, அவர்களின் தலைமை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது."

"தற்போதைய சூழ்நிலையில், ஜூனியர் மருத்துவர்கள் வாரம் ஒன்றுக்கு 65 மணி நேரங்களிலிருந்து 75 மணி நேரங்கள் வரை வேலை செய்கிறார்கள். ஆதலால், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது" என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த போது அவர் சொன்னார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற போதிலும், கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் நலனிலும் அக்கறைக் கொண்டுள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்படுவதாக அவர் சொன்னார். 

"ஜூனியர் மருத்துவர்களின் வேலை நேரத்தை குறைத்தால், அவர்களுக்கு தேவையான, முழுமையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியாது."

"சில சமயங்களில், குறிப்பிட்ட மணி நேரத்தை விட, அவர்கள் கூடுதல் நேரம் வேலையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அமைச்சு இறங்கியுள்ளது" என்று சுப்ரா தெரிவித்துக் கொண்டார். 

இதனிடையே, இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 24.59 மில்லியன் நோயாளிகள், நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டனர் என்றும் அவர்களில், 7,90,655 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் சுப்ரா கூறினார்.

 

 

ஷாஆலாம், அக்.14- சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாம் ஆச்சரியப்படவில்லை என்று பிரதமர்    டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தெரிவித்தார். 

ஒவ்வொரு வருடமும் அம்மாநிலத்தில் குறைந்தது 40 ஆயிரம் மக்கள் அந்நோயால் பாதிப்படைவதாகவும், ஒரு நாளுக்கு 100 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார். 

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை சிலாங்கூரில், 39,158 பேர் டிங்கி காய்ச்சலுக்கு  உள்ளாகியுள்ளனர். அவர்களில் 59 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். 

"இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், சட்டவிரோத குப்பைத் தளங்கள் மற்றும் வடிகால்கள், ஆகியவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பு மாநில அரசாங்கத்துடையது. அலட்சியமே இதற்குக் காரணம்" என்றார் அவர்.

சவ்ஜானா உத்தாமா என்ற இடத்தில் தேசிய நீல பெருங்கடல் வியூகம்-'என் அழகிய சுற்றுப்புறம்' என்ற ஒன்றுகூடி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கியப் பின்னர் பிரதமர்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் இந்த டெங்கி காய்ச்சலுக்குள்ளவதாக தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு, கூட்டரசு அரசாங்கம் மற்றும் அம்மாநில அரசாங்கம் ஒன்றுகூடி சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. 

இந்த முயற்சி 98 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது என்று நஜிப் கூறினார். 

இதனிடையில், 42 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய இரண்டாவது சவ்ஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி கட்டுமானத்திற்கு 57.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக நஜிப் அறிவித்தார்.  

 

More Articles ...