Top Stories

 

கோலாலம்பூர், நவ.7- பினாங்கு, கெடா மற்றும் பேராக் மாநிலங்களில் வெள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் பல்வித நோய்கள் பரவக்கூடும் என்றும், சுத்தம் பேணிக் காக்கப்படவில்லை என்றால், அதனால் மக்கள் பலர் பாதிக்கப்படுவர் என்றும் சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

அழுக்கு மற்றும் அசுத்தமான வெள்ளநீரினால், வயிற்றுப்போக்கு (diarrhoea), தைபாய்டு (typhoid), ஹெப்படைடிஸ் ஏ (hepatitis A), மற்றும் ஆகிய நோய்கள் ஏற்படும் என்று அவர் சொன்னார்.

வெள்ள நீரின் காரணமாக, தோல், கண்கள், காதுகள், மூக்கு மற்றும் தொண்டைப் புண்கள் ஏற்படக்கூடும் என்று அறிக்கை ஒன்றின் வாயிலாக நோர் ஹிஷாம் தெரிவித்துள்ளார். 

இதலால் ஏற்படும் காயங்களுக்கு, உடனடி சிகிச்சை வழங்கப்படவில்லை என்றால், அதன் தீவிரம் அதிகமாகும் என்று அவர் எச்சரித்தார். குறிப்பாக, சிறுவர்கள், வயது முதிந்தவர்கள் மற்றும் பலநாட்களாக நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அவர் சொன்னார். 

வெட்டுக் காயங்கள் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு, அதற்கு தகுந்த பாதுகாப்பான உடைகளை அணிந்துக் கொள்வது சிறந்தது. வெள்ள நீருடன் நேரிடை தொடர்பு ஏற்பட்டால் வாய்ப்புண்களும் ஏற்படும். 

அதனைத் தவிர்க்கும் முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று சுங்கை பூலோ மருத்துவமனையின் தொற்று நோய் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் கிரிஸ்தோபர் லீ கூறினார். 

உடலில் எப்பகுதியிலாவது வெட்டுக் காயங்களோ அல்லது புண்களோ ஏற்பட்டிருந்தால், அவற்றில் வெள்ள நீர் பட்டால், உடனே அப்பகுதிகளை சுத்தமான நீரைக் கொண்டு அலம்ப வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். 

வயிற்றுப் போக்கு அல்லது காய்ச்சல் ஏற்பட்டால், மக்கள் உடனடியாக மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

கோலாலம்பூர், நவ.3- அதிக நேரம் கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களின் சிரமத்தை குறைக்கும் பொருட்டு, சுகாதார அமைச்சு நீண்டகால தீர்வு ஒன்றை ஆராய்ந்து வருவதாக சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுப்ரமணியம் கூறினார். 

ஒரு குறிப்பிட்ட மணி நேரத்திற்கு தான் மருத்துவர்கள் வேலை செய்ய வேண்டும் என்று விதிமுறை அமலில் இருந்த போதிலும், இது மேலும் தொடரக்கூடாது என்ற அடிப்படையில், முறையான அமைப்பு இருந்தால் நல்லது என்று சுகாதார அமைச்சு கருதுவதாக சுப்பிரமணியம் மேலும் கூறினார். 

"அவசர அழைப்புகளின் கீழ் பணியில் அமர்த்தப்படும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்களுக்கு தேவையான ஓய்வை வழங்கும் அதிகாரத்தை சுகாதார அமைச்சு, அவர்களின் தலைமை அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது."

"தற்போதைய சூழ்நிலையில், ஜூனியர் மருத்துவர்கள் வாரம் ஒன்றுக்கு 65 மணி நேரங்களிலிருந்து 75 மணி நேரங்கள் வரை வேலை செய்கிறார்கள். ஆதலால், அவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்படுகிறது" என்று நாடாளுமன்றத்தில் கேள்விக்கு பதிலளித்த போது அவர் சொன்னார்.

நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற போதிலும், கடமையில் இருக்கும் மருத்துவ அதிகாரிகள், ஜூனியர் மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் நலனிலும் அக்கறைக் கொண்டுள்ளதால், இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண சுகாதார அமைச்சு தீவிரமாக செயல்படுவதாக அவர் சொன்னார். 

"ஜூனியர் மருத்துவர்களின் வேலை நேரத்தை குறைத்தால், அவர்களுக்கு தேவையான, முழுமையான பயிற்சிகளை எங்களால் வழங்க முடியாது."

"சில சமயங்களில், குறிப்பிட்ட மணி நேரத்தை விட, அவர்கள் கூடுதல் நேரம் வேலையில் இருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றனர். அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியிலும் அமைச்சு இறங்கியுள்ளது" என்று சுப்ரா தெரிவித்துக் கொண்டார். 

இதனிடையே, இந்த வருடத்தில் முதல் எட்டு மாதங்களில் மொத்தம் 24.59 மில்லியன் நோயாளிகள், நாடு முழுவதும் உள்ள பொது மருத்துவ மனைகளில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டனர் என்றும் அவர்களில், 7,90,655 பேர் வெளிநாட்டவர்கள் என்றும் சுப்ரா கூறினார்.

 

 

ஷாஆலாம், அக்.14- சிலாங்கூர் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும், டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது குறித்து தாம் ஆச்சரியப்படவில்லை என்று பிரதமர்    டத்தோஶ்ரீ நஜிப் ரசாக் தெரிவித்தார். 

ஒவ்வொரு வருடமும் அம்மாநிலத்தில் குறைந்தது 40 ஆயிரம் மக்கள் அந்நோயால் பாதிப்படைவதாகவும், ஒரு நாளுக்கு 100 பேர் டிங்கி காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார். 

இவ்வருடம் ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் 9-ஆம் தேதி வரை சிலாங்கூரில், 39,158 பேர் டிங்கி காய்ச்சலுக்கு  உள்ளாகியுள்ளனர். அவர்களில் 59 பேர் மரணமடைந்துள்ளதாக பதிவாகியுள்ளது என்று புள்ளி விவரம் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார். 

"இது பெருமைக்குரிய விஷயம் அல்ல. கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், சட்டவிரோத குப்பைத் தளங்கள் மற்றும் வடிகால்கள், ஆகியவற்றை சுத்தம் செய்யும் பொறுப்பு மாநில அரசாங்கத்துடையது. அலட்சியமே இதற்குக் காரணம்" என்றார் அவர்.

சவ்ஜானா உத்தாமா என்ற இடத்தில் தேசிய நீல பெருங்கடல் வியூகம்-'என் அழகிய சுற்றுப்புறம்' என்ற ஒன்றுகூடி சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை அதிகாரப்பூர்வமாக தொடக்கியப் பின்னர் பிரதமர்  தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநிலத்தில்தான் அதிகமானோர் இந்த டெங்கி காய்ச்சலுக்குள்ளவதாக தெரிவித்த அவர், இந்த எண்ணிக்கையை குறைக்கும் பொருட்டு, கூட்டரசு அரசாங்கம் மற்றும் அம்மாநில அரசாங்கம் ஒன்றுகூடி சுத்தம் செய்யும் பணிகளைத் தொடங்கியுள்ளது. 

இந்த முயற்சி 98 நாடாளுமன்றத் தொகுதிகளில் தொடங்கப்பட்டுள்ளது என்று நஜிப் கூறினார். 

இதனிடையில், 42 வகுப்பறைகள் மற்றும் இதர வசதிகளுடன் கூடிய இரண்டாவது சவ்ஜானா உத்தாமா இடைநிலைப்பள்ளி கட்டுமானத்திற்கு 57.6 மில்லியன் ரிங்கிட் வழங்கப்பட்டுள்ளதாக நஜிப் அறிவித்தார்.  

 

புதுடில்லி, ஜூலை 29- கர்ப்பிணிகள் தாங்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சிறு தவறு ஏற்பட்டால் கூட குழந்தைக்கு பாதிப்பு ஏற்படுத்திவிடும் . கர்ப்பக் காலத்தில் பப்பாளிளைத் தவிர்க்க வேண்டும் என்று கூறுவார்கள்.

அதைப்போலத்தான் அன்னாசிப் பழமும் இதிலுள்ள புரோமிலியன் கருப்பையை பலவீனமடையச் செய்யும். கருப்பைச் சுவர்களில் சுருக்கத்தை ஏற்படுத்துவதால் குறைப் பிரசவம் நிகழலாம்.

சிலர் வயிற்றுப் போக்கால் பாதிப்படையலாம். மேலும் புரோமிலியன், பப்பாளியில் உள்ள பப்பைன் என்ற நொதிக்கு சமமானது. இது கருப்பைச் சுவரை மென்மையாக்கிவிடுவதால் கருச்சிதைவு கூட ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

குறிப்பாக அன்னாசியில் பச்சை மற்றும் கனியாமல் கெட்டியாக இருக்கும். இது போன்ற பழத்தை சாப்பிடுவது மிகுந்த கெடுதலை ஏற்படுத்தும்.

கர்ப்ப காலத்தில் காணப்படும் நித்திரையின்மை, ஒரு சங்கடமான பிரச்சனை என்றாலும், பொதுவாக இது எல்லா பெண்களிடமும் காணப்படுகின்றது. இந்த தூக்க குறைபாடு ஏற்பட பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு காரணமும் மிகவும் தனித்தன்மை வாய்ந்தது. எனவே அந்த காரணங்கள் ஒவ்வொன்றையும் தனிப்பட்ட முறைகளைக் கையாண்டு தூக்கமின்மை நோயை குணப்படுத்த வேண்டும்.

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை வருவதற்கு ஏகப்பட்ட காரணங்கள் உள்ளன. அவ்வாறு வருவதற்கு குழந்தையும் கூட ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் போகலாம். ஒரு கர்ப்பிணி தாய் கருவுற்ற பிந்தைய கால கட்டங்களில், கரு நன்கு வளர்ந்து விடுவதால் அவரது வயிற்றின் அளவு அதிகரிக்கும். அவ்வாறு ஏற்படும் சங்கடங்கள் கூட தூக்கமின்மை வர காரணமாக இருக்கலாம்.

ஒரு சில தாய்மார்களுக்கு குழந்தையின் அதிக எடை காரணமாக முதுகு வலி வரும். அவ்வாறு உண்டாகும் முதுகுவலியானது அந்த தாய்க்கு தூக்கமில்லாத இரவுகளை நிச்சயம் பரிசளிக்கும். குழந்தையின் அதிக எடையானது தாயின் சிறுநீர்ப்பை மீது ஒரு அழுத்தத்தை உருவாக்கும். அதன் காரணமாக அந்த தாய்க்கு இரவு முழுவதும் அடிக்கடி சிறுநீர் வரும். இதன் காரணமாக அந்தத் தாயால் கண்டிப்பாக இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க இயலாது.

கர்ப்ப காலத்தில் ஏற்படும் கவலைகள் கண்டிப்பாக தூக்கமின்மையை ஏற்படுத்துவதுடன், ஒரு தீய சுழற்சியையும் ஏற்படுத்துகின்றது. மேலும் கர்ப்ப கால ஹார்மோன் மாற்றங்கள் தூக்கமின்மையை ஏற்படுத்துவதால், ஒரு தாய் இயற்கையாகவே அடிக்கடி இரவில் விழித்து இருப்பாள்.

ஒரு தாய் தன் தூக்கமின்மைப் பற்றி கவலைப்பட்டால் அது அவளது குழந்தையையும் கண்டிப்பாக பாதிக்கக்கூடும். இந்தப் பதற்றம் தூக்கமின்மையை மேலும் அதிகரிக்கும். 

கர்ப்ப காலத்தில் தூக்கமின்மை எவ்வாறு சமாளிப்பது :

கருவின் எடை காரணமாக உங்களுடைய வயிற்றின் அளவு, வடிவம் மற்றும் எடை, உங்களை கட்டாயம் கஷ்டப்படுத்தும். எனவே நீங்கள் புதிய நிலைகளில் தூங்க முயற்சி செய்வீர்கள். அது உங்களுக்கு கட்டாய முதுகு வலியைத் தரும்.

கர்ப்பிணிகள் இடது பக்கமாக தூங்குவதோடு, ஒரு குஷன் அல்லது மென்மையான பொருள் எதையாவது உங்களுடைய வயிற்றுக்கு கீழ் வைத்துக் கொண்டு தூங்க முயற்சி செய்யலாம்.

தூங்க முயற்சிக்கும் முன் சூடான வெந்நீரில் குளியல் போடுவது உங்களுடைய அழுத்தத்தை குறைத்து, தூக்கத்தைப் பரிசளிக்கும்.

நல்ல மனதுக்கு பிடித்த இசை இங்கே சில நன்மைகளைத் தருகின்றது. இயற்கையான ஒலிகளான பறவைகளின் ரீங்காரங்கள் அல்லது கரையில் மோதும் கடலின் ஒலி போன்றவை உங்களுக்கு ஆழ்ந்த உறக்கத்தைத் தரும்.

இரவு நேரங்களில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவுகளை குறைந்த அளவு எடுத்துக் கொள்வது, உங்கள் மூளை அதிக அளவில் செரோட்டினை உற்பத்தி செய்வதை ஊக்குவிக்கும். செரோட்டின் ஆனது நீங்கள் நன்றாக தூங்க உங்களுக்கு துணை புரியும்.

எனவே, கர்ப்ப காலத்தில் தூக்கமின்மையை குணப்படுத்த மேற்கூறிய இந்த தந்திரங்களை முயற்சி செய்து நன்கு தூங்குங்கள். 

 

கடும் வெயிலால் உங்கள் சருமம் வறண்டு காணப்படுகிறதா? சரியான தூக்கமின்றி கருவளையமா? கவலை வேண்டாம். இருக்கவே இருக்கிறது இயற்கை பொக்கிஷம், வெள்ளரிக்காய். வெள்ளரியில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் சிலிக்கா இணைந்து சருமத்துக்குப் புத்துணர்வூட்டி கருவளையத்தை போக்குகின்றன. 

வெள்ளரிக்காயைக் கத்தரித்து, கண்கள் மேல் 20 நிமிடங்கள் வைத்திருப்பது அல்லது வெள்ளரிச் சாற்றைப் பருத்தியில் நனைத்து கண்களின் மீது 20 நிமிடங்களுக்கு வைத்திருப்பது நல்ல பலன் தரும். 

கண்வீங்கி போய் இருந்தால் வெள்ளரியைத் துண்டுகளாக நறுக்கி, கண்களைச் சுற்றி 20 நிமிடங்கள் வைத்தால் அதில் உள்ள அஸ்கார்பிக் அமிலம் கண்ணின் வீக்கத்தைப் போக்கும். 

வெள்ளரியை முகத்தில் தடவினால் முகம் பொலிவு பெறும். வெள்ளரிச் சாற்றுடன் சிறிது எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவ வேண்டும். 20நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவு பெறும். கரும்புள்ளி போன்றவை நீங்கும். 

சூரியனில் இருந்து வரும் புறஊதாக் கதிர்வீச்சு, சருமத்தை பாதிக்கிறது. இதைத் தவிர்க்கும் ஆற்றல் வெள்ளரிக்கு உண்டு. மேலும் சருமத்துக்குக் குளிர்ச்சியூட்டி, மென்மையாக்குவதுடன் புற ஊதாக் கதிர்வீச்சால் ஏற்பட்ட பாதிப்பையும் போக்குகிறது. 

வெள்ளரியில் உள்ள சிலிகான் மற்றும் கந்தகம், முடி வளர்ச்சிக்குப் பெரிதும் உதவுகின்றன. வெள்ளரியைச் சாறு எடுத்து தலையில் பூசி, 15-20 நிமிடங்கள் கழித்து சீயக்காய் அல்லது ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.  

  

 

இஸ்லாமாபாத், நவ.18- பாகிஸ்தானின் ஹரிப்பூர் மாவட்டத்தில் பாமலா ஸ்துபா என்ற பகுதியில் 1,700 ஆண்டுகளுக்கு முந்தைய உலகின் மிகப் பழமை வாய்ந்த புத்தரின் சிலையை அகழ்வாய்வாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். 

துயில் நிலையில் இருக்கும் இந்த புத்தர் சிலையுடன், புத்த சமயம் சார்ந்த 500க்கும் அதிகமான புராதனப் பொருள்களையும்ஆய்வாளர்கள் தோண்டி  இங்கிருந்து எடுத்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர்- பாத்தூன்கவா பகுதியிலுள்ள ஹரிப்பூர் மாவட்டத்தில் தொடர்ந்து அகழ்வாய்வுகளை நிபுணர்கள் நடத்தி வருகிறார்கள். சுமார் 48 அடி நீளம் கொண்ட இந்தச் சிலை 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கக்கூடும். எனவே, இதுதான் உலகின் பழமையான புத்தராக இருக்கலாம் என நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஹரிப்பூர் தான் பாகிஸ்தானிய புத்த சமயத்தின் அடிப்படைத் தளமாக இருந்திருக்கக்கூடும் என்று அருங்காட்சியகத்தின் இயக்குனர் அப்துல் சமாட் தெரிவித்தார். கிட்டத்தட்ட மௌரிய சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தியான அசோகர் காலத்தியத்தோடு இது தொடர்புடையதாக இருக்கலாம் என்றார் அவர்.

இந்தப் பகுதியை அரசாங்கம் பாதுகாக்க வேண்டும் என்றும் சமய வரலாற்றின் மிக முக்கிய கூறாக இப்பகுதி விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளையில் இந்தப் பகுதி பாதுகாக்கப்பட்டு, சமயச் சுற்றுலாவுக்கான ஒரு தளமாக மாற்றப்படவேண்டும். இதனால் உலகளவில் புத்த சமயத்தினர் பாகிஸ்தானுக்கு சுற்றுலா மேற்கொள்ள வழி பிறக்கும் என்று முக்கிய அரசியல் கட்சியின் தலைவரான இம்ரான் கான் வலியுறுத்தினார்.

கடந்த காலங்களில் இதுபோன்ற அகழ்வாய்வுகளின் வழி கண்டுபிடிக்கப்பட்ட சில புத்தத் தளங்கள், பாகிஸ்தானின் சமயத் தீவிரவாதிகளால் சேதப்படுத்த சம்பவங்கள் நடந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

கோலாலம்பூர்,அக்.9- சுமார் எட்டு லட்சம் ரிங்கிட் செலவில் உருவாகியுள்ள பூச்சோங் ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் ஆலயத்தில் புரட்டாசியை தொடர்ச்சியாக சிறப்புப் பூஜைகள் நடந்து வருகின்றன.

பூச்சோங் வட்டாரத்திலேயே பிரமாண்டமாக அமைந்துள்ள ஒரே விஷ்ணு ஆலயம் இவ்வாலயம்தான். புரட்டாசி மாதம் என்பது தெய்வீக மாதம். இம்மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் பெருமாளுக்கு அவதார திருநாளாகும். ஒவ்வொரு நாளும் காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை சந்தான கிருஷ்ண பூஜை நடைபெறுகிறது.

புரட்டாசி நான்கு சனிக்கிழமைகளில் இரவு ஸ்வாமி வாகனங்களில் விசேஷ அலங்காரத்துடன் புறப்படும், இராஜ உபசார பூஜைகளும் விமரிசையாக நடைபெறும்.

ஶ்ரீ ஶ்ரீனிவாச பெருமாள் தீராத வினைகளைத் தீர்க்கும் பெருமாளாக பக்தர்கள் வேண்டிய வரங்களை அருளி வரம் தரும் பெருமாளாக அருள் புரிகின்றார்.

அவருக்குப் பிரியமான இந்த மாதத்தில் அவரை தரிசித்தும், உபயங்கள், அன்னதானம் எடுத்தும் எம்பெருமாள் ஶ்ரீ ஶ்ரீநிவாச பெருமாளை வணங்கினால் நல்லதே நடக்கும். மேல் விவரங்களுக்குப் பக்தர்கள் 016-6379180 அல்லது 016-9166321 என்ற எண்களுக்குத் தொடர்பு கொள்ளலாம். 

மேஷம் : நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும் நாள். வசதி, வாய்ப்புகளைப் பெருக்கிக் கொள்ள விரும்புவீர்கள். எந்தக் காரியத்தையும் துரிதமாகச் செய்து முடிப்பீர்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

ரிஷபம்: தாராளமாகச் செலவிட்டு மகிழும் நாள். தொழில்,உத்யோகத்தில் புதிய மாற்றங்களைச் செய்வது பற்றிச் சிந்திப்பீர்கள். சொன்ன சொல்லைக் காப்பாற்ற முயற்சிப்பீர்கள். வீடு மாற்றச் சிந்தனை மேலோங்கும்.

மிதுனம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலை மோதும் நாள். அன்பு நண்பர் களின் ஆதரவு பெருகும். உத்யோகத்தில் உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு ஆச்சர்யப்படுவர்.வருமானம்  இருமடங்காகும்.

கடகம்: பொதுவாழ்வில் புகழ்கூடும் நாள். புது முயற்சிகளில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் மேலோங்கும். பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேர்வதற்கான அறிகுறிகள் தோன்றும்.

சிம்மம்: நல்லவர்களைச் சந்தித்து நலம் காணும் நாள். நண்பர்கள் நம்பிக்கைக்குரிய விதம் நடந்து கொள்வர்.பழைய பிரச்சனைகளைத் தீர்க்க முழுமூச்சுடன் செயல்படுவீர்கள். தந்தை வழி ஒத்துழைப்பு உண்டு.

கன்னி: ஆலய வழிபாட்டால் அமைதி காண வேண்டிய நாள். உடல் நலம் சீராக ஒரு சிறு தொகையைச் செலவிடுவீர்கள். கூட்டாளிகளால் சில தொல்லைகள் ஏற்படும். வரவைக்காட்டிலும் செலவு கூடும்.

துலாம்: போன்மூலம் பொன்னான தகவல் வந்து சேரும் நாள். தொழில் வளர்ச்சி கூடும். உள்ளன்போடு பழகியவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். வாகனம் வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

விருச்சகம்: எண்ணங்கள் எளிதில் நிறைவேறும் நாள். இனிய விழாக்களுக்க அழைப்புகள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் விருப்பப்படியே நடந்து கொள்வர்.

தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். பிற இனத்தாரால் பெருமை வந்து சேரும் சாதுர்யமாக செயல்பட்டு பொருள்வரவைப் பெருக்கிக் கொள்வீர்கள். வராத உறவினர்கள் திடீரென வரலாம்.

மகரம்: இடம் வாங்கும் முயற்சியில் இனிய பலன் கிடைக்கும் நாள். புதிய வாய்ப்புகள் எதிர்பாராத விதத்தில் வந்து சேரும்.   விலைஉயர்ந்த பொருட்களை வாங்கி ஆனந்தம் பெறுவீர்கள்.

கும்பம்: நல்ல சம்பவங்கள் நடைபெறும் நாள். வளர்ச்சிக்கு வித்திட்டவர்களை சந்தித்து மகிழ்வீர்கள். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும்.  இளைய சகோதரத்தால் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

 

மீனம்: புகழ் கூடும் நாள். பொருளாதார முன்னேற்றம் கருதி முக்கிய முடிவெடுப்பீர்கள்.  கலைத்துறை சம்பந்தப்பட்டவர்களால் காரிய அனுகூலம் கிடைக்கும். வீடு வாங்க விற்க எடுத்த முயற்சி வெற்றி தரும்.

Advertisement