மேலும் ஒரு நடிகை காரில் கடத்தல்; பணம் கேட்டு மிரட்டல்!

இந்தியச் சினிமா
Typography

மும்பை, ஏப்ரல் 10- அண்மையில் நடிகை பாவனா கடத்தப்பட்டது போல இந்தி நடிகை ஒருவரைக் காரில் கடத்தும் முயற்சி நடந்துள்ளது. இதில் அந்த பாலிவூட் நடிகை காரிலிருந்து வெளியே குதித்து தப்பித்துள்ளார்.

அண்மையில் நடிகை பாவனா ஒரு கும்பலால் கடத்தப்பட்டு பாலியல் தொல்லை செய்யப்பட்ட சம்பவத்தின் பரபரப்பு அடங்கியுள்ள நிலையில், மேலும் ஒரு சம்பவம் இந்தியில் நடந்துள்ளது. இந்தி நடிகையான அர்ச்சனா கௌதம் (வயது 22) என்பவர் மேற்கு கோரெகான் பகுதியில் வசித்து வருகிறார். இவர் இந்தி படங்களிலும் விளம்பர படங்களில் மாடலாகவும் இருந்து வருகிறார். 

இவருக்கு முகநூல் வழி அனிருத் என்ற பெயரில் ஆடவன் ஒருவன் பழக்கமாகியுள்ளான். நேரில் சந்திக்காமலே இவர்கள் முகநூலில் மட்டும் சாட்டிங் செய்துள்ளனர். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் அவ்வாடவன் அர்ச்சனாவை தொடர்பு கொண்டு, ஜவுளிக் கடை விளம்பர படமொன்றில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளதாகவும் அதற்கான 50 ஆயிரம் ரூபாய் முன்பணம் தரவிருப்பதாகவும் கூறியுள்ளான். 

பின்னர், அந்த பணத்தை அர்ச்சனாவே நேரில் சென்று பெற்றுக் கொள்ளும்படியும் கூறியுள்ளான். இதனை நம்பிய அர்ச்சனா, சொன்ன இடத்திற்கு செல்ல அங்கு 4 பேர் இருந்துள்ளனர். அவர்கள் அர்ச்சனாவைக் காரில் ஏற்றி கடத்தியுள்ளனர்.

காரில் இருந்த நால்வரும் தங்களை சிபிஐ அதிகாரிகள் எனவும் அர்ச்சனாவை விபசார வழக்கில் பதிவு செய்துவிடுவோம் எனவும் கூறி ரூ.1 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். அர்ச்சனா தன் அண்ணனுக்கு தொலைப்பேசி வழி அழைத்து பணத்தைக் கொடுத்து விட்டு தன்னைக் காப்பாற்றும்படி கூறியுள்ளார். கடத்தல்காரர்கள் காரினை விமான நிலையம் அருகே நிறுத்தி காத்திருக்க, அர்ச்சனா சட்டென்று வெளியே குதித்து ஓடியுள்ளார். கடத்தல்காரர்கள் அவரை துரத்தி சென்றுள்ளனர். இருப்பினும் அங்கு நின்று கொண்டிருந்த இளைஞர்களும் ஆட்டோ டிரைவர்களும் அர்ச்சானாவைக் காப்பாற்றியுள்ளனர்.

வழக்கை பதிவு செய்த போலீசார் அனிருத் என்பவன் யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS