பொதுச் சொத்துகள் சேதம்: நடிகர் ஷாருக்கான் மீது வழக்கு

இந்தியச் சினிமா
Typography

மும்பை, பிப்.17- பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தது மற்றும் கலவரத்திற்குக் காரணமாக இருந்தது ஆகிய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மீது வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஷாருக்கானின் நடிப்பில் அண்மையில் 'ரயீஸ்' என்ற திரைப்படம் வெளிவந்தது. தற்போது நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தப் படத்தைப் பிரபலம் ஆக்குவதற்காக கடந்த 24-ஆம் தேதி மும்பையிலிருந்து டில்லிக்கு எக்ஸ்பிரஸ் ரயில் மூலம் பயணம் அவர் செய்தார். இந்தப் பயணத்தின் போது வழிநெடுக பல ரயில் நிலையங்களில் ரசிகர்களைச் சந்திப்பதன் வழி படத்தை பிரபலப்படுத்தினார். 

இதனால் பல ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். ரசிகர்கள் திரண்டதால் எல்லா ரயில் நிலையங்களிலும் மக்கள் நெரிசல் அதிகமானது.

ராஜஸ்தானிலுள்ள கோடா ரயில் நிலையத்தில் ரயில் சிறிது நேரம் நின்றபோது ஷாருக்கானைப் பார்க்க அவரது ரசிகர்கள் திரண்டதால் அமளி ஏற்பட்டது. நெரிசலின் போது ரயில் நிலையத்தில் இருந்த கடைகள் சேதமடைந்ததுடன், பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன.

இந்த ரயில் நிலையத்தில் கடை நடத்திக் கொண்டிருந்த விக்ரம்சிங் என்பவர் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டார். அவரது கடை முழுமையாகச் சேதமடைந்து, பணமும் திருட்டுப்போனது. இது குறித்து அவர் கோடா ரயில்வே போலீசில் புகார் செய்தார்.

இதன் மீது விசாரணை நடத்திய போலீசார், நடிகர் ஷாருக்கான் மீது வழக்குப் பதிவு செய்தனர். பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியது மற்றும் கலவரத்தை ஏற்படுத்தியது ஆகிய அடிப்படையில் வழக்குப் பதிவாகி உள்ளது. 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS