பாகுபலி 2-இல் ஷாருக்கான் சிறப்பு தோற்றமா?

இந்தியச் சினிமா
Typography

சென்னை, பிப்.14- இந்திய திரைப்படத்தையே ஒருகணம் நின்று பார்க்கவைத்த படம் பாகுபலி. கிராபிக்ஸ் என்பதை மறந்து நிஜ உலகில் வாழும் நிலையை உருவாக்கியது இப்படம். இதன் இரண்டாம் பாகம் தயாராகி வரும் நிலையில் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் இந்தி நடிகர் ஷாருக்கான் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

2015ம் ஆண்டு வெளியான பாகுபலி படம் மிக பெரிய வெற்றி படமாகும். சரித்திர பின்னணியில் வெளியான இப்படம் வசூல் சாதனை செய்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வரும் நிலையில், பின் ஆக்கப்பணிகள் மட்டும் 30 ஸ்டுடியோக்களில் நடைபெற்று வருகின்றன.

பாகுபலி இரண்டாம் பாகத்தில் பிரபாஸ், ராணா, சத்யராஜ், அனுஷ்கா, தமன்னா, நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்து வருகின்றனர். இப்படத்தை மேலும் பிரமாண்டமாக வழங்க இயக்குனர் ராஜமௌளி பல யுக்திகளைக் கையாண்டு வருவதாக சினிமா வட்டாரம் கூறி வருகிறது. 

அதில், இந்திய சினிமாவின் நாயகன் ஷாருக்கானை இப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஷாருக்கான் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு விட்டதாகவும் விரைவில் இவருக்கான படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனவும் கூறப்படுகிறது.

இத்தகவல் எந்த அளவிற்கு உண்மையானது என ரசிகர்கள் கேள்வி எழுப்ப, இது உண்மை எனில் படத்தின் பிரமாண்டம் இரட்டிப்பாகும் என ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS