பீஹாரிலும் 'பத்மாவதி' திரைப் படத்திற்கு தடை!  

இந்தியச் சினிமா
Typography

பாட்னா, நவ.28- பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்ஜய் லீலா பன்சாலியின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படமான 'பத்மாவதி'க்கு  பீஹார் மாநிலத்தில்  தடை விதிக்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். 

ராஜஸ்தான், குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் அப்படத்திற்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்தப் படத்திற்குத் தடை விதிக்கப்பட வேண்டும் என்ற வழக்கறிஞர் மனோஹர் லால் ஷர்மாவின் மனுவை, உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில்,  உடனடியாக பீஹார் இந்த தடையை அமல்படுத்தியது.

இப்படம் திரைக்கு வராத பட்சத்தில், அதைத் தடை செய்ய வேண்டும் என்று அரசியல்வாதிகளோ அல்லது முக்கியப் பதவிகளை வகிப்பவர்கள் கருத்து வெளியிட வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதை அலட்சியப் படுத்தும் வகையில் முதல்வர் நிதிஷ் குமார் அம்மாநிலத்தில் 'பத்மாவதி' படத்திற்கு தடை விதித்துள்ளார். 

இதனிடையில், பா.ஜ.க உறுப்பினர்கள் சிலரும் அவர்களின் ஆதரவாளர்களும், பீஹார் சட்டமன்ற வாசலில், இப்படத்தை வெளியிடக்கூடாது என்று கோஷம் போட்டு மறியலில் ஈடுபட்டுள்ளனர்.  இத்திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட வாரியத்தின் சான்றிதழ் இதுவரை வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

அதே வேளையில் மனோஹர் ஷர்மாவின் மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம்,தடை செய்யும் அதிகாரம் மத்திய திரைப்பட வாரியத்திற்கு தான் உள்ளது என்று தெரிவித்துள்ளது. அநாவசியமாக 'பத்மாவதி' திரைப்படம் குறித்து அரசியல்வாதிகள் கருத்துரைத்ததால் தான் அப்படத்திற்கு எதிர்ப்பு வலுவாகியதாகவும் உச்ச நீதிமன்றம் கூறியது. 

 

 

 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS