பத்மாவதி: தீபிகாவை உயிருடன் கொளுத்தினால் ரூ.1 கோடி பரிசா? மதவாத அமைப்பினால் அதிர்ச்சி!

இந்தியச் சினிமா
Typography

மும்பை, நவ.20- நடிகை தீபிகா படுகோனே நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படமான பத்மாவதிக்கு நாளுக்கு நாள் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், தீபிகாவினை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கப்படும் என மதவாத அமைப்பு ஒன்று அறிவித்ததை அடுத்து இந்தி திரையுலகத்தில் பெரும் அதிர்ச்சி நிலை உண்டாகியுள்ளது. 

நடிகை தீபிகா இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் பத்மாவதி எனும் படத்தில் நடித்தார். இப்படம் வரும் டிசம்பர் 1ஆம் தேதி வெளிவரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. குறிப்பாக, உத்திரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெரிய எதிர்ப்பு உருவாகியது.

இந்த நிலையில், உ.பியில், பரேலி உள்ள அகில இந்திய பாரதீய சத்ரிய மகாசபா என்ற அமைப்பினர் பத்மாவதி படத்திற்கு எதிராக பெரிய ஊர்வலத்தை நடத்தினர். மேலும் தீபிகா மற்றும் இயக்குனரின் உருவ பொம்மைகளை எரித்தனர்.

அதன் பின் கூட்டத்தில் பேசிய அமைப்பின் இளைஞர் பிரிவு தலைவர் புவனேஸ்வர் சிங், "நடிகை தீபிகாவை உயிருடன் கொளுத்துபவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும்" என அறிவித்தார். இதனால் இந்தி திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

BLOG COMMENTS POWERED BY DISQUS