தீபிகா படுகோன் தலையை வெட்டி வருபவருக்கு ரூ.5 கோடியா..! 'பத்மாவதி' வெளிவருவதில் சிக்கல்!

இந்தியச் சினிமா
Typography

மும்பை, நவ.17- பிரபல ஹிந்தி திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கத்தில் உருவாகும் 'பத்மாவதி' திரைப்படம், எதிர்வரும் டிசம்பர் மாதம் 1-ம் தேதியன்று திரையீடு காணவிருக்கிறது. இது ராஜ்புத் சமூகத்தினரைப் பற்றிய வரலாற்றுப் படம் என்று கூறப்படுகிறது. நடிகை தீபிகா படுகோன், இப்படத்தில் ராணி பத்மாவதி என்ற பாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்துக்கு,  ராஜ்புத் சமூகத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 'பத்மாவதி' படத்துக்குத் தடை விதிக்க வேண்டும். தீபிகா படுகோன் உடனடியாக நாட்டைவிட்டு வெளியேற வேண்டும். இல்லையெனில், அவரது தலையை வெட்டி எடுத்து வருபவர்களுக்கு 5 கோடி ரூபாய் பரிசு தரப்படும் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சாத்ரிய சமாஜ் அமைப்பைச் சேர்ந்த தாக்கூர் அபிஷேக் சாம் அறிவித்துள்ளார். 

"இந்தப் படத்தை வெளியிடுவதை இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி நிறுத்திவைக்க வேண்டும். மீறி படத்தை வெளியிட்டால், கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ராஜ்புத் பெண்ணாக நடித்திருக்கும் தீபிகா, எங்களின் உணர்வுகளைக் காயப்படுத்தியிருக்கிறார். ராஜ்புத் சமூகத்தைச் சேர்ந்த எந்த ஒரு பெண்ணும் பொதுவெளியில் நடனம் ஆட மாட்டார். இயக்குநர் சஞ்சய்க்கு, ராஜ்புத்களின் வரலாறு தெரியவில்லை. வரலாற்று உண்மையைச் சிதைத்த அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

'சர்வ் பிராமின் மகாசபா' என்ற அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள், ரத்தத்தால் எழுதிய கடிதம் ஒன்றை மத்திய திரைப்படத் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பி, தங்கள் எதிர்ப்பைப் பதிவுச் செய்துள்ளனர். கார்னி சேனா என்ற அமைப்பு, டிசம்பர் 1-ம் தேதி, இந்த படத்தை எதிர்க்கும் வகையல் மறியல் ஒன்றில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிப்பின் போது, எதிர்ப்பாளர்கள் பலர் ஷூட்டிங் தளத்தில் போடப்பட்டிருந்த செட்டுகளை உடைத்து, அங்கு பணியில் இருந்த பணியாளர்களையும் தாக்கினர். மேலும் படப்பிடிப்பு உபகரணங்களையும் சேதப்படுத்தினர். அத்தாக்குதலில் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் காயம் அடைந்தார். 

இப்படத்தின் போஸ்டர் வெளியீட்டின் போதும் அதனை தீ வைத்துக்கொளுத்தி அவர்கள் தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்குத்தொடரப்பட்டது. ஆனால், அந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

BLOG COMMENTS POWERED BY DISQUS