மெர்சல்’ வழக்கு தள்ளுபடி: பிடிக்கவில்லை என்றால் பார்ப்பதை நிறுத்து! -நீதிபதிகள்

இந்தியச் சினிமா
Typography

 சென்னை,அக்.27- நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் 'மெர்சல்' படத்திற்குத் தடை கேட்டு தொடரப்பட்ட வழக்கில் மனுதாரரிடம் நீதிபதிகள் சரமாரி கேள்விகளை முன்வைத்த பின்னர் வழக்கை தள்ளுபடி செய்தனர்.

மெர்சல் படத்துக்கு தடை கேட்டு வக்கீல் ஏ.அஸ்வத்தாமன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.

‘சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.), குறித்து தவறான தகவல் மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ளது. மேலும், இந்த படத்துக்கு அவசர கதியில் தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. 

எனவே, இந்திய இறையாண்மைக்கு எதிரான காட்சிகளை கொண்ட மெர்சல் படத்தை திரையிட தடை விதிக்கவேண்டும். இந்த படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும்’ என்று ஏ.அஸ்வத்தாமன் கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் 'மெர்சல்' படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்களால் பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.

மெர்சல் என்பது படம் தான், அது நிஜவாழ்க்கை அல்ல, அப்படியே பொதுநலனோடு வழக்கு தொடர்ந்திருந்தால் குடிப்பது, புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இருந்திருக்குமேயானால் நீதிமன்றத்தை நாடியிருக்கலாம், அதுமட்டுமின்றி மெர்சலில் மாற்றுத் திறனாளிகள் தவறாக சித்தரிக்கப்படுவதை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கலாமே. 

கருத்து சொல்வது அவரவரின் உரிமை, சுதந்திரம். கருத்துச் சுதந்திரம் என்பது அனைவருக்குமானது, தனிப்பட்ட ஒருவருக்கு படம் பிடிக்கவில்லையெனில் படத்தை பார்ப்பதை தவிர்த்து விடுங்கள்.. இதற்காக ஏன் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்’ என்று நீதிபதிகள் கேள்விகளைத் தொடுத்தனர். மெர்சல் படத்தை எதிர்ப்பதில் எந்தவொரு முக்கிய காரணமும் இல்லை என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். 

 

BLOG COMMENTS POWERED BY DISQUS