அமைதிப்படை புகழ் காமெடி நடிகர் 'அல்வா' வாசு காலமானார்!

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஆக.18- அமைதிப்படை படத்தில் சத்யராஜ் உடன் இணைந்து நடித்து பிரபலமான நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு காலமானார். கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்ட அவரின் உடல் மோசமடைந்ததை அடுத்து நேற்று காலமானார்.

மதுரையைச் சேர்ந்தவரான வாசுதேவன், சினிமா ஆசையால் சென்னைக்கு வந்து மறைந்த இயக்குனர் மணிவண்ணனிடம் உதவியாளராக பணியாற்றினார். பி.ஏ. பட்டதாரியான இவர் வாழ்க்கைச் சக்கரம் படத்தின் மூலம் நடிகர் ஆனார். ஆனாலும், சத்யராஜின் அமைதிப்படை படத்தில் அவருடன் இணைந்து நடித்த பிறகே வாசு சினிமாவில் பிரபலமானார்.

அப்படத்தில் சத்யராஜுக்கு அல்வா செட் செய்து கொடுப்பவராக நடித்ததால் 'அல்வா' வாசு என்றே பின்னர் அழைக்கப்பட்டார். பின்னர், வடிவேலுடன் இணைந்து இங்கீலீஷ்காரன், மருதமலை, கந்தாசமி ஆகிய படத்தில் நடித்து காமெடி நடிகராக பிரபலமானார்.

இந்நிலையில், கல்லீரல் முழுமையாக செயலிழந்து கவலைக்கிடமான நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக கூறி, மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், மதுரையில் உள்ள அவரது வீட்டில் நேற்று அல்வா வாசு காலமானார். அவருக்கு அமுதா என்ற மனைவியும் கிருஷ்ண ஜெயந்திகா என்ற மகளும் இருக்கின்றனர்.

BLOG COMMENTS POWERED BY DISQUS