பிக்பாஸ் சர்ச்சை: என்னைக் கைது செய்து கொள்ளுங்கள்- கமல் அதிரடி

இந்தியச் சினிமா
Typography

சென்னை, ஜூலை.13- தன்னை கைது செய்தாலும், சட்டம் என்னைப் பாதுகாக்கும் என பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. 

கலாச்சார பண்பாட்டை கெடுக்கும் இந்த நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டும் மற்றும் கமல் உள்ளிட்ட அதில் கலந்து கொண்டோரை கைது செய்யவேண்டும் என இந்து மக்கள் கட்சியினர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனு  அளித்திருந்தனர்.

இதுதொடர்பாக நடிகர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், என்னை கைது செய்ய வேண்டும் என்று பலர் சொல்கிறார்கள், அதை பற்றி எனக்கு கவலை இல்லை.

என்னை கைது செய்ய வேண்டும் என்றால் அது நடக்கட்டும். சட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நீதியின் மீதும் நம்பிக்கை இருக்கிறது. அந்தச் சட்டம் என்னை பாதுகாக்கும். என்னை கைது செய்யக்கூறும் கூட்டத்துக்கு, நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று அதிரடியாக பதிலளித்துள்ளார்.

மேலும் கூறும்போது, பிக்பாஸ் நிகழ்ச்சி ஏற்கனவே இந்தியில் ஒளிபரப்பானது தான். என்னை நம்பும் மக்களுக்கு நல்ல விருந்தளிக்கவே நான் கடமைப்பட்டிருக்கிறேன். சினிமாவிலேயே சென்சார் இருக்கக் கூடாது என நினைப்பவன் நான். பணத் தேவைக்காகத்தான் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துகிறேன். பொதுச்சேவை செய்ய ‘பிக்பாஸ்’ நடத்தவில்லை என்றும் கூறினார். 

காயத்ரி ரகுராம், சக போட்டியாளரை சாதிய ரீதியில் ‘சேரி பிகேவியர்’ என கூறியது பெரும் சர்ச்சையாகியுள்ளதே என்ற கேள்விக்கு விளக்கம் அளித்த நடிகர் கமல்ஹாசன், சேரி பற்றி காயத்ரி பேசியதை நான் எழுதி தரவில்லை என்றார். மேலும் நான் எழுதி கொடுத்ததை அவர் சொல்லியிருந்தால் நான் மன்னிப்பு கேட்டிருப்பேன் என்றும் பிக்பாஸ் வீட்டுக்குள் நடப்பதற்கு நான் பொறுப்பு கிடையாது என்றும் கமல்ஹாசன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

BLOG COMMENTS POWERED BY DISQUS