சென்னை, மே 23- நடிகர் சூர்யா உட்பட 8 நடிகர்களுக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத கைதாணை வழங்கி உத்தரவிட்டுள்ளது. பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் ஆஜராகாத காரணத்தால் நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசியதாக நடிகர்கள் சூர்யா, சத்யராஜ், சேரன், சரத்குமார், விவேக், விஜயகுமார், அருண்விஜய், நடிகை ஶ்ரீபிரியா ஆகிய 8 பேர் மீது நீலகிரி குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகாததால் 8 பேருக்கும் ஜாமீனில் வெளிவர முடியாத கைதாணையைப் பிறப்பித்து நீலகிரி மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

சென்னை,மே.23- மலேசியாவில் நடந்த சிவகார்த்திகேயனின் படப்பிடிப்பு நேற்றுடன் முடிவடைந்தது. சிவகார்த்திகேயன் முதல் முறையாக மலேசியாவில் படப்பிடிப்பிற்கு வந்தார். ‘தனி ஒருவன்’ வெற்றிப் படத்திற்குப் பிறகு மோகன்ராஜா இயக்கி வரும் படம்தான் ‘வேலைக்காரன்’.  

இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்கிறார் நயன்தாரா. இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக் குழுவினர் மலேசியா வந்தனர்.

ஏப்ரல் 25-ஆம் தேதி மலேசியாவில் ஆரம்பமான இப்ப்படத்தில் படப்பிடிப்பு தொடர்ந்து 25 நாட்களுக்கும் மேலாக நடந்து நேற்றுடன் முடிவுக்கு வந்தது.  இது பற்றி டிவிட்டரில் பதிவிட்டுள்ள இயக்குனர் மோகன்ராஜா “என் அபிமான மலேசியாவில் நான் படமாக்கியுள்ள மூன்றாவது படம் இது. மிகவும் வெற்றிகரமான படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்தது. அன்பான தமிழ் மக்களுக்கு எனது நன்றி”. என தெரிவித்துள்ளார்.

 

சென்னை மே 23 - சாதி பெயரைச் சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் என்று கூறி நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி மீது அவரது மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்படுத்துள்ளது. 

பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் நடிகர் தாடி பாலாஜி, தற்போது விஜய் டிவியில் கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் நடுவராக வருகிறார். இவரது மனைவி பெயர் நித்யா. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவர்கள் மாதவரத்தில் வசித்து வருகின்றனர். சமீபத்தில் விஜய் டிவியில் நடந்த நடன நிகழ்ச்சியின்போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆனால் இவர்களுக்குள் சமீப காலமாகவே நிஜத்திலும் மோதல் இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில் தற்போது போலீஸ் நிலையம் வரை இவர்களது மோதல் வந்து விட்டது. மாதவரம் காவல் நிலையத்தில் பாலாஜி மீது நித்யா திடீரென பரபரப்பு புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தனது சமுதாயத்தைக் குறிப்பிட்டு சொல்லி திட்டுகிறார், அடிக்கிறார் கொடுமை செய்கிறார் என்று நித்யா பரபரப்பான புகாரைக் கூறியுள்ளார்.

நடிகர் பாலாஜி மீது அவரது மனைவி கொடுத்துள்ள இந்த பரபரப்பான புகாரால் சின்ன திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. சாதியைச் சொல்லி பாலாஜி திட்டுவதாக அவரது மனைவி கூறியிருப்பதால் இந்த விவகாரம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

பாலாஜிக்கும், அவரது மனைவிக்கும் இடையே சமாதானம் ஏற்படுத்தும் முயற்சிகளையும் இருவருக்கும் வேண்டியவர்கள் செய்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரச்சனை இப்போதைக்கு முடிவது போல தெரியவில்லை. மாதவரம் போலீஸார் இதுவரை வழக்குப் பதிவு செய்யவில்லை. விசாரணை நடந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 22- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச பேச்சால் சினிமா மட்டுமின்றி தமிழக அரசியலிலும் பரபரப்பு ஏற்பட்டது. பலர் ஆதரவு தெரிவித்தாலும் சிலர் எதிர்ப்பு தெரிவித்து ரஜினியின் வீட்டிற்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யவிருப்பதாக தகவல் வெளியானதை அடுத்து பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். 

நீண்ட நாட்கள் கழித்து ரசிகர்களைச் சந்திக்க ஆர்வம் கொண்டு ஐந்து நாட்கள் ரசிகர்களுடன் படம் எடுத்துக் கொண்ட ரஜினிகாந்த், சந்திப்பின்போது தான் அரசியல் பிரவேசம் செய்யவிருப்பது போன்று தோன்ற கூடிய வகையில் உரையாற்றினார். ரஜினியின் ரசிகர்கள் அதனை ஆதரித்தாலும் அரசியல்வாதிகள் பலர் பகிரங்கமாகவே அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் (ரஜினி) தமிழக அரசியலில் ஈடுப்படக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து தமிழர் முன்னேற்றப் படை எனும் கும்பல் இன்று காலை 11 மணிக்கு ரஜினியின் வீடு முன்பு போராட்டம் நடத்தவிருப்பதாக தகவல் பரவியது. 

இதனையடுத்து, சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு இன்று காலை முதல் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டனர்.

More Articles ...