அந்தக் கால நினைவுகளை மீண்டும் துளிர்க்க செய்த மலேசியப் படம் 'தோட்டம்'- டத்தோ சரவணன் பாராட்டு (VIDEO)

மலேசியச் சினிமா
Typography

கோலாலம்பூர், நவ.22- தோட்டத்தையே உயிராக நினைத்து வாழ்ந்த மக்களின் பழைய நினைவுகளை மீண்டும் துளிர்க்க செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது மலேசியத் திரைப்படம் தோட்டம்.

இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ இயக்கத்தில் இவ்வாரம் வெளிவரவிருக்கும் மலேசியத் திரைப்படம் தோட்டம். மலேசிய இந்தியர்களின் ஆணிவேராக கருதப்படும் தோட்டத்தினைப் பின்புலமாக வைத்து இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்திற்கான சிறப்பு பிரத்தியேக காட்சி, நேற்று முன்தினம் தலைநகரில் உள்ள பிஜே ஸ்டேட் திரையரங்கில் திரையிடப்பட்டது. இதற்கு இளைஞர், விளையாட்டுத்துறை துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் சிறப்பு வருகை புரிந்தார். படத்தில் நடித்த நடிகர்கள் உட்பட பல உள்ளூர் கலைஞர்கள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பொதுமக்களும் பிரத்தியேக காட்சியைக் கண்டு களித்தனர்.  

பல தலைமுறைகளாக தாங்கள் வாழ்ந்த தோட்டம் மேம்பாட்டாளர்களால் வாங்கப்படும்போது அதனால் பாதிக்கப்படும் தோட்டத்து மக்களின் துயரங்களை அழகாக காட்டியுள்ளார் இயக்குனர். தோட்டம் எங்கள் வீடு அல்ல உயிர் என்பது போன்ற வசனங்களுக்கு ஏற்றார்போல் படம் முழுக்க தோட்டத்தின் வாசனை தெளிவாக காட்டப்பட்டுள்ளது.

படத்தைப் பார்த்தப் பின் பேசிய துணையமைச்சர் டத்தோ எம்.சரவணன் தோட்டம் படம், பார்க்கும் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக தங்களின் தோட்ட வாழ்க்கை ஞாபகம் வரும் என்றார். மேலும், இம்மாதிரியான மலேசியத் திரைப்படங்களை மக்களிடம் எப்படி கொண்டு செல்வது என்பது தாம் சிந்திப்பதாகவும் கூறினார். 

மலேசியப் படங்களை மொத்த மலேசிய இந்தியர்களின் 10 விழுக்காட்டு பேர் திரையரங்களில் வந்து பார்த்தாலும் படத் தயாரிப்பாளர்கள் நன்மை பெற்று, மீண்டும் தரமான படங்களை தயாரிக்க முடியும் என்றும் கூறினார்.

பட இயக்குனர் அரங்கண்ணல் ராஜூ பேசுகையில், இப்படம் வழி தாம் கடந்து வந்த தோட்டத்து வாழ்க்கை சம்பவங்களையும் அந்த இனிமையான தருணங்களையும் பதிவு செய்ய நினைத்தது நிறைவேறிவிட்டதாக கூறினார். படத்தின் இறுதிக் காட்சியானது, மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் அமையவேண்டும் என்பதால் தன்னுடைய ஆசையை காட்சியாக காட்டியதாகவும் அதனைத் தெரிந்து கொள்ள மக்கள் வரும் வியாழக்கிழமை முதல் திரையங்கில் தோட்டம் படத்தைப் பார்க்கலாம் என தெரிவித்தார்.

நேற்றைய நிகழ்ச்சிக்கு படத்தில் முதன்மை பாத்திரத்தில் நடித்த மூத்த கலைஞர் கே.எஸ்.மணியம், முன்னணி கலைஞர்களான ஹரிதாஸ், சசி மற்றும் தோட்டம் பட கலைஞர்களும் வருகை தந்திருந்தனர். 

BLOG COMMENTS POWERED BY DISQUS