Top Stories

கோலாலம்பூர், பிப்.3- கச்சா பொருள்களின் விலையேற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சிநிலை ஆகியவை காரணமாக கடந்த ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த 40 முன்னணி கோடீஸ்வர்களின் சொத்து மதிப்பு அவர்களை மேலும் ஒரு படி உயர்த்தி இருக்கிறது. 

ஒட்டுமொத்தமாக இந்த 40 பணக்காரர்களின் சொத்து மதிப்பு 6,362 கோடி ரிங்கிட்டுக்கு அதிகரித்து, அதாவது முந்தைய ஆண்டைக் காட்டிலும் கடந்த ஆண்டில் 28 விழுக்காடு சொத்து மதிப்பு கூடியிருக்கிறது எனத் தெரிய வந்துள்ளது.

சற்று தொய்வுற்றிருந்த உலகப் பொருளாதாரம், கடந்த ஆண்டில் குறிப்பிட்ட காலக் கட்டத்திற்குப் பின்னர் வழக்க நிலைக்குத் திரும்பியது. சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலையேற்றம் ஆகியவற்றினால் சிறிது காலம் உலகப் பொருளாதாரத்தில் தடுமாற்றம் நிலவியது.

இந்த மலேசியக்  40 கோடீஸ்வரர்களில் அதிகளவில் தனது சொத்து மதிப்பில் உயர்வைக் கண்ட முதல் நபர் என்றால்  மலேசியாவின் முதல் நிலைக் கோடீஸ்வரரான  ரோபெர்ட் குவோக்  எனலாம்.

கடந்த ஆண்டில் மட்டும் இவருடைய சொத்து மதிப்பு 1,317 கோடி வரை அதிகரித்துள்ளது. அடுத்த இடத்தைப்  பிர்ஸ் மெட்டல் அலுமினியம் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின்  நிறுவனர் டான்ஶ்ரீ கோன் போ கியோங் பிடித்துள்ளார்.

இதனால், கடந்த ஆண்டில் 14 ஆவது இடத்தில் இருந்த இவர், இப்போது 8ஆவது மிகப் பெரிய மலேசியக் கோடீஸ்வரராக ஆகியிருக்கிறார். இம்முறை இந்த 40 கோடீஸ்வரர்களின் பட்டியலில் புதிதாக எழுவர் இடம் பிடித்திருக்கின்றனர்.

ஏர் ஆசியா குழுமத்தைச் சேர்ந்த டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ், டத்தோ  கமாருடின் மெரானுன் ஆகியோர் இந்த ஏழு புதுமுகங்களில் அடங்குவர். ஏர் ஆசிய நிறுவனப் பங்குகளின் மதிப்பு உயர்வு, இவர்களுக்கு கைகொடுத்துள்ளது. சுமார் 395 கோடி ரிங்கிட் வரை சொத்து மதிப்பு அதிகரித்து 17 ஆவது இடத்தை எட்டி இருக்கிறார்கள். ஏர் ஆசியா உள்கட்டமைப்பில் இவர்கள் செய்த பெரும் மாற்றங்கள் இவர்களின் வருமான பெருக்கத்திற்கு வழிவகுத்ததாக கருதப்படுகிறது.

முன்னணி 40 கோடீஸ்வரர்களின் பட்டியலில் இவர்களை அடுத்து செர்பா டைனமிக் ஹோல்டிங்ஸ் நிறுவன அதிபர்களான டத்தோ முகம்மட் அப்துல் கரிம், அப்துல் காதிர் ஷாகிப் மற்றும் டத்தோ அவாங் டாவுட் புத்ரா ஆகியோருடன் வேள்யூ பார்ட்டனர்ஸ் குழுமத்தின் தலைவர் டத்தோஶ்ரீ  சியா செங் ஹய் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் தொழில் ரீதியில் ஏற்பட்ட சரிவு காரணமாக சொத்து மதிப்பில் பெரும் சரிவைக் கண்டவர்கள் இந்தப் பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளனர். அந்த வகையில் சபுரா எனர்ஜி சென். பெர்ஹாட் நிறுவனத் தலைவர் டான்ஶ்ரீ ஷாரில் சம்சுடின் முன்பு 29 ஆவது இடத்தில் இருந்த நிலையில், இப்போது இந்த 40 பேரின் பட்டியலில் இடம்பெறாமலேயே போயிருக்கிறார். இந்த 40 பேர் பட்டியலில் இருந்து வீழ்ச்சி கண்டவர்களில் குறிப்பிடத்தக்க மற்றொருவர் டான்ஶ்ரீ மொக்‌ஷானி மகாதீர் ஆவார்.

இந்த 40 மலேசியக் கோடீஸ்வரர்களின் பட்டியலில் டான்ஶ்ரீ ஆனந்த கிருஷ்ணன் தற்போது 5ஆவது இடத்திலும் டான்ஶ்ரீ ஞானலிங்கம் 12 ஆவது இடத்திலும் டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ் 17 ஆவது இடத்திலும் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோலாலம்பூர், டிச.15- டிஜிட்டல் கரன்ஸிகளை (இலக்கியல் நாணயங்கள்) நாட்டில் உபயோகப்படுத்த சட்டபூர்வமாக எவ்வித ஒப்பந்தமும் இதுவரை செய்யப்படவில்லை. அவை சட்டப்பூர்வமானதல்ல என்று தேசிய வங்கியான பேங்க் நெகாரா எச்சரித்துள்ளது. 

இந்த நாணயங்களை நாட்டிலுள்ள எந்த நிறுவனமும் தங்களின் வணிகத்திற்கு உபயோகிப்பதில்லை என்றும் பேங்க் நெகாரா தகவல் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பான வியாபார உடன்பாடுகள் குறித்து பொதுமக்கள் மிக எச்சரிக்கையாகவும், கவனமாகவும் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று அந்த வங்கி அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நாணய வணிகத்தில் அதீத ஏற்றத் தாழ்வுகள் நிகழ்கின்றன. இணையத்தின் வாயிலாக, இந்த நாணய வியாபாரத்திற்கு தாக்குதல் ஏற்படலாம். அதுமட்டுமல்லாது, சந்தைகளில் இந்த நாணயத்திற்கு பற்றாக்குறை கூட நேரலாம் என்ற அடிப்படையில், இந்த நாணிய வணிகத்தில் ஈடுபடுவோருக்கு பேங்க் நெகாரா எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்த நாணய வணிக பரிமாற்றங்களால் ஒருவருக்கு நஷ்டம் அல்லது பிரச்சனைகள் ஏதும் நேர்ந்தால், வங்கிகளின் சட்டத்திட்டத்தின் கீழ், அவருக்கு உதவிகள் ஏதும் வழங்கப்படாது.நாட்டில் சட்டப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டு வணிகத்திற்கு உட்படுத்தப்படும் கரன்ஸிகளை மட்டுமே பேங்க் நெகாரா ஆதரித்து வருகிறது.  

2001-ஆம் ஆண்டின் சட்டவிரோத நடவடிக்கை மற்றும் பயங்கரவாத நிதி எதிர்ப்புச் சட்டத்தின் கீழ், இந்த நாணயங்களை விற்பனைக்கோ அல்லது வாங்குதலுக்கோ உட்படுத்துவோர் குற்றஞ்சாட்டப்படலாம். 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோலாலம்பூர், டிசம்.14- பிரசித்திப் பெற்ற மலிவுக் கட்டண விமானச் சேவை நிறுவனமான 'ஏர் ஆசியா'வில் இருந்து தாம் ஓய்வுப் பெறப் போகிறார் என்று வெளியான தகவலை அதன் தலைமைச் செயல்நிலை நிர்வாக அதிகாரியான டான்ஶ்ரீ டோனி பெர்னாண்டஸ்  நிராகரித்தார்.

இங்கு நடந்த நிருபர்களின் சந்திப்பின் போது இந்தத் தகவல் குறித்து கேள்வி எழுப்பபட்டது. உடனடியாக இந்தத் தகவலை அவர் மறுத்தார்.

"நான் பதவி விலகவில்லை. நான் பதவியிலிருந்து ஓய்வு பெறவும் போவதில்லை" என்று டான்ஶ்ரீ டோனி தெளிவுப் படுத்தினார். இதற்கு முன்பே அவர் தம்முடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து தமது கருத்தை அவர் பதிவு செய்துள்ளார்.

''நான் பதவி ஓய்வுப்பெறப் போவதாக வந்த வதந்தி நகைப்புக்குரிய ஒன்று'' என அவர் பதிவிட்டுள்ளார். ''ஏர் ஆசியாவின் எதிர்காலத்தை வரையறுக்கும் வகையில் நான் பல்வேறு புதிய நியமனங்களைச் செய்து, அறிவித்து வருவது மிக உற்சாகமானதாக இருக்கிறது'' என்று டிவிட்டர் செய்தியில் அவர் கூறியுள்ளார்.

''நான் வேறெங்கும் போகப்போவதில்லை, உற்சாகமான எதிர்காலம் என்முன் நிற்கிறது'' என்றும் அவர் கூறியுள்ளார்.

ஏர் ஆசியா விமானச் சேவை நிறுவனத்தின் நிர்வாக வாரியத்தில் தொடர்ச்சியாக பல மாற்றங்களை டான்ஶ்ரீ டோனி அறிவித்து வரும் நிலையில் அவர் பதவி விலகுகிறார்.., ஓய்வுபெறப் போகிறார் என்றெல்லாம் வதந்திகள் பரவியுள்ளன.

முன்பு ஏர் ஆசியாவின் நிர்வாகச் செயல் அதிகாரியாக (சி.இ.ஓ.) இருந்து வந்த அய்ரின் ஒமார், தற்போது டிஜிட்டல், உருமாற்றம், மற்றும் நிறுவனச் சேவை குழுமத்தின் துணை சி.இ.ஓ. ஆக நியமிக்கப்பட்டுள்ளார். அதே வேளையில் அவர் வகித்த சி.இ.ஓ. பதவிக்கு 46 வயதுடைய ரியாட் அஸ்மாட் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஏர் ஆசியா எக்ஸ் பெர்ஹாட் நிறுவனத்தின் நடப்பு இயக்குனரான டான்ஶ்ரீ அஸ்மாட் கமாலுடினின் புதல்வரே ரியாட் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ரியாட் மற்றொரு முக்கிய நிறுவனமான நாஷா கார்ப்பரேட் ஹோல்டிங் நிறுவனத்தில் திட்ட, வியூக மற்றும் வர்த்தக மேம்பாட்டுத் துறையின் இயக்குனராக இருந்து வருகிறார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

கோலாலம்பூர், அக்.26- நாளை தாக்கல் செய்யபடவிருக்கும் 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் இந்திய சமுதாய வர்த்தகர்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படும் என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது. 

நாட்டின் வளர்ச்சியில் இந்திய தொழில் வர்த்தக சமூகத்தின் பங்கு குறித்து அரசாங்கம் நன்கு அறிந்திருப்பதாகவும், அதனைக் கருத்தில் கொண்டு பட்ஜெட் அறிவிப்பில் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்படும் என்று அச்சமேளனத்தின் தலைவர் டான்ஶ்ரீ டாக்டர் கெ.கென்னத் ஈஸ்வரன் கருத்து தெரிவித்தார். 

சிறு மற்றும் நடுத்தர இந்திய குத்தகையாளர்களை நாட்டின் முக்கிய திட்டங்களில், குறிப்பாக இரயில் சேவை மற்றும் எம்.ஆர்.டி போன்ற பொதுப் போக்குவரத்து திட்டங்களில், ஈடுபடுத்த அரசாங்கம் முயற்சித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

இத்தகைய பொதுப் போக்குவரத்து திட்டங்களில் ஈடுபடும் தகுதி மற்றும் தேவையான நிதி நிலைத்தன்மை இந்திய குத்தகையாளர்களுக்கு உண்டு என்று அவர் கூறினார். 

இதனிடையே, கடந்த 2017-ஆம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் 'சீட்' எனப்படும் இந்திய தொழில் முனைவர் நிதி திட்டத்தின் கீழ் இந்திய தொழில் முனைவர்களுக்கு 100 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கிய பிரதமருக்கு இவ்வேளையில் அவர் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 கோலாலம்பூர், அக்.24- மலேசியாவின் பொருளாதாரம் இவ்வாண்டு வளர்ச்சியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக மதிப்பீட்டு ஆய்வொன்றை வெளியிட்ட உலக வங்கி, நாட்டின் பொருளாதாரம் 5.2 விழுக்காடாக வளர்ச்சி அமையக்கூடும் என்று இரண்டாவது முறையாக மதிப்பீடு செய்துள்ளது. 

மலேசிய அரசாங்கம் மக்களின் நலனில் அக்கறைக் கொண்டு செயல்படுவதையே இது குறிக்கின்றது என்று பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தெரிவித்தார்.

பெட்ரோல் விலை உயர்வு மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவால் சில நாடுகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்ட போதிலும், மலேசியாவின் பொருளாதாரம் வளர்ச்சிக் கண்டுள்ளது பெருமைக்குரிய விஷயமாகும் என்று 2018-ஆம் ஆண்டின் பட்ஜெட்  அறிவிப்பிற்கு முன் வெளியிடப்பட்டுள்ள தனது 80 அம்ச பொருளாதார தூரநோக்கத் திட்ட அறிக்கையில் அவர் கூறினார். 

2009-ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்றப் பின்னர், நஜிப் பொருளாதார உருமாற்றத் திட்டத்தை அமல்படுத்தினார். அத்திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரம் சீராக வளர்ச்சி அடைந்து வருகிறது. 

"2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் பிரதமராக நான் பதவி ஏற்றேன். அப்போது உலக நாடுகள் 1930-ஆம் ஆண்டிலிருந்த பொருளாதார பின்னடைவைக் காட்டிலும், இக்கட்டான சூழ்நிலையில் பொருளாதாரம் தொய்வு கண்ட நிலையில் இருந்தது" என்று நஜிப் நினைவு கூர்ந்தார். 

"உலகப் வாணிபத்தை அடிப்படையாகக் கொண்ட மலேசியா, அந்த பொருளாதார பின்னடைவால் பெரும் பாதிப்புக்குள்ளாகியது. நம் ஏற்றுமதி 20 விழுக்காடு தொய்வு கண்டது. 2009-ஆம் ஆண்டின் முதல் காலாண்டுப் பொருளாதாரம் 6.2 விழுக்காடு வீழ்ச்சி கண்டது" என்றார் அவர். 

2009-ஆம் ஆண்டிலிருந்து 2016-ஆம் ஆண்டு வரை தேசிய ஒட்டுமொத்த உற்பத்தி வருமானம் கிட்டத்தட்ட 50 விழுக்காடு வரை அதிகரித்துள்ளது. 2.26 மில்லியன் வேலை வாய்ப்புகளும் இக்காலக் கட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. 

கடந்த ஏழு வருடங்களில், மலேசியாவில் உருவாக்கப்பட்ட 2.26 மில்லியன் வேலை வாய்ப்புகளில், 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் அதிக வருமானத்தைத் தரக்கூடிய வேலை வாய்ப்புகளாகும். 

இதனிடையே, இவ்வருடம் மார்ச் மாதத்தில்மலேசியாவின் ஏற்றுமதி 82.63 பில்லியனாக உயர்வு கண்டுள்ளதாக நஜிப் தெரிவித்தார். இதுவே நாட்டின் மிக அதிகமாகப் பதிவு செய்யப்பட்ட மாதாந்திர ஏற்றுமதி உயர்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

 கோலாலம்பூர்,அக்.2- உலகிலேயே 3ஆவது மிகப் பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பாளர்களான இந்தியாவின் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனம் தனது தனது மோட்டார் தயாரிப்[பு தொழில் கூடத்தை மலேசியாவில் அமைக்கிறது.

தென்கிழக்காசியாவின் விற்பனைச் சந்தையை இலக்காக வைத்து ஊடுருவும் நோக்கில் கெடாவின் குரூணில் உள்ள தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்கள் பொருத்தும் திட்டம் மேற்கொள்ளப் படவிருப்பதாக அதன் அனைத்துலக வர்த்தகப் பிரிவின் தலைவர் ரகேஷ் சர்மா தெரிவித்தார்.

தொழிற்சாலையில் மோட்டார் சைக்கிள்களைப் பொருத்தும் பகுதியை உருவாக்கும் தொழில்நுட்பங்களை பஜாஜ் வழங்கும் பணியைத் திட்டம் ஏற்கெனவே தயார்நிலையில் இருக்கிறது என்று அவர் சொன்னார்.

இந்த வாகனங்கள் பொருத்தும் தளம், அடுத்த 6 மாதங்களுக்குள் தனது பணியைத் தொடங்கிவிடும். இங்குள்ள அந்தத் தொழிற்சாலை மலேசியாவின் டிஆர்பி-ஹைகோம் நிறுவனத்தின் ஒரு பிரிவான மோடெனாஸுக்கு சொந்தமானது. இதற்கான கூட்டு ஒப்பந்தத்தில் பஜாஜ் கையெழுத்திட்டுள்ளது என்று ரகேஷ் சர்மா தெரிவித்தார்.

இந்தியாவின் புனே நகரில் பாஜாஜ்-மோடெனாஸ் வினியோகஸ்தர்களுக்கான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ரகேஷ் சர்மா இதனைத் தெரிவித்தார்.

மோடேனாஸ் தொழிற்சாலையில் பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் உற்பத்தி செய்யப்படும். மோடேனாஸ் எங்களின் உற்பத்தி மையமாக விளங்கும் என்றார் அவர். 

ஏற்கெனவே பஜாஜ் மோட்டார் சைக்கிள்கள் பிலிப்பைன்ஸ், கம்போடியா ஆகிய நாடுகளுக்குள் பிரவேசித்து விட்டது. அடுத்து தாய்லாந்து மற்றும் வியட்னாமிற்குள் ஊடுருவ திட்டமிடப்பட்டுள்ளது. மலேசியாவின் சிறந்த வர்த்தகச் சுற்றுச் சூழலே தங்களது பிராந்திய மையத்தை மலேசியாவில் அமைக்க முடிவெடுத்தற்குக் காரணம் என்று ரகேஷ் சர்மா விளக்கினார்.

 

 

 

 

  கோலாலம்பூர், ஜூலை.20- மலேசியாவில் கியா ரக வாகனங்களை விநியோகிக்கும் நாசா கியா மலேசியா செண்டிரியான் பெர்ஹாட் நிறுவனம், 2017-ஆம் ஆண்டில் 5,100 வாகனங்களை விற்பனை செய்ய இலக்கு கொண்டுள்ளது.

இவ்வாண்டின் முதல் பாதியிl, கியா கார்களின்விற்பனையில் புதிய உந்துதல் உருவாக்கியிருப்பதால் கடந்தாண்டைக் காட்டிலும் இந்நிறுவனம் சிறந்த அடைவு நிலையை எட்டும் என நாசா கார்ப்பரேஷன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் வாகன குழுமத் தலைமை நிர்வாக அதிகாரி டத்தோ ஷாம்சன் ஆனந்த் ஜியார்ஜ் நம்பிக்கை தெரிவித்தார். 

கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், இவ்வாண்டின் முதல் பாதியில் கியா ரக கார்களின் விற்பனை 14.4 விழுக்காடு உயர்வு கண்டுள்ளது. ஆகையால், இவ்வாண்டு இறுதிக்குள் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடையமுடியும் என்று அவர் இன்று புதிய கியா ரியோ ரக வாகனத்தை அறிமுகப்படுத்திய போது கூறினார்.

இந்நிறுவனம் கடந்த ஆண்டு மொத்தம் 4,378 கியா ரக கார்களை விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிட்டத்தக்கது.

 

கோலாலம்பூர், ஜூலை.3- எதிர்வரும் 2020-ஆம் ஆண்டுக்குள் 1,200 கோடி ரிங்கிட் மதிப்புள்ள மரத் தளவாடப் பொருட்களை மலேசிய தளவாட உற்பத்தியாளர்கள் ஏற்றுமதி செய்வார்கள் என அரசாங்கம் நம்புகிறது. ரப்பர் மரக் கட்டைகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் உள்ளூர் தளவாடப் பொருள்களின் தயாரிப்பு அதிகரிக்கும் என அரசாங்கம் எதிர்பார்க்கிறது.

ஜூலை 1 முதல் தேதியிலிருந்து மலேசியாவின் ரப்பர் மரக் கட்டைகளின் ஏற்றுமதிக்குத் தடை விதிதந்திருக்கும் காரணத்தினால் தற்போது தளவாடப் பொருட்களின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தோட்டத் தொழில் மற்றும் மூலப் பொருள் துறை அமைச்சர் டத்தோஶ்ரீ மா சியூ கியோங் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு மலேசியாவில் 952 கோடி ரிங்கிட் தளவாடப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டது. 2015ஆம் ஆண்டின் இடம்பெற்ற 914 கோடி ரிங்கிட் மதிப்புள்ள தளவாடப் பொருள்களின் ஏற்றுமதியை காட்டிலும் 4.2 விழுக்காடு அதிகமாகும்.

அதிகத் தளவாடப் பொருளின் உற்பத்தியில் உலகில் எட்டாவது இடத்தில் மலேசியா இருக்கிறது.

மலேசியாவில் ரப்பர் மர ஏற்றுமதிக்குத் தடை விதித்ததால், இனி தளவாடப் பொருட்கள் உற்பத்தியாளருக்கு நிறைய வாய்ப்புகள் அமையும் என எதிபார்க்கப்படுகிறது. 

இதன் மூலம் உற்பத்தியாளர்கள், தங்கள் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகளை எளிதில் நிறைவேற்றுவதோடு மலேசிய ஏற்றுமதியின் அளவையும் ளாத்கரிக்கும் வகையில் அமையும் என்று அவர் சொன்னார். 

 

 

 கோலாலம்பூர் ஜூன்,21- போட்டிகள் நிறைந்த வர்த்தக உலகில், ஒன்றை விட ஒன்று புதுமையாக இல்லாவிடில், சந்தையில் தோல்வி கண்டு விடுவோம்.  போட்டிகள் இல்லாத புதிய சந்தை உலகிற்கு செல்லும் வியூகம் மிக முக்கியம். அதற்கு உதவக்கூடிய யுக்திகளை வழங்கும் 'புளூ ஓசன் வியூகம்' இன்று உலகளவில் பரவியுள்ளது என்று தமிழகத்தின் முன்னோடி புதுமை வியூக தொழிபதிபர் அசோக் குமார் தெரிவித்தார்.

கற்றது கை மண் அளவு, கல்லாதது கடலளவு என்று சொல்வார்களே, அப்படி நாம் அறிந்திராத விதத்தில் புதுமை நோக்கில் சிந்திக்க வைப்பது தான் புளூ ஓசன் வியூகம் (Blue Ocean Strategy) திட்டம். 

இன்றைய இளைஞர்கள் கடிவாளம் போட்ட மாதிரி, ஒரு குறிப்பிட்ட மாதிரியான, ஒரு முன்கூட்டியே வரையறுக்கப்பட்ட ஒரு வாழ்க்கை வட்டத்திற்குள் சுழன்று கொண்டிருக்காமல், மாறுபட்டு சிந்திக்கவும் வாழ்க்கையை வடிவமைக்கவும் இந்த புளூ ஓசன் வியூக முறை கற்பிக்கிறது என்று தொழில் அதிபரும், சிந்தனையாளருமான அசோக்குமார் கூறுகிறார்.

மலேசியா உள்பட இன்றைக்கு உலக நாடுகள் பலவற்றை ஆக்கிரமித்து இருக்கும் இந்த புளூ ஓசன் வியூகக் முறை குறித்து தொழிலதிபர் அசோக் குமார், 'வணக்கம் மலேசியா'வுக்கு அளித்த காணொளிப் பேட்டி ஒன்றில் விளக்கினார்.

வாழ்க்கையில் சவால்கள் இல்லாமல் இருக்கமுடியாது. புதுமைகளை நோக்கி இன்றைய இளைய சமுதாயம் சிந்திக்க தங்களை தயார் படுத்திக் கொள்ளவேண்டும். அத்தகைய சிந்தனைகள் சாவால்களை வெல்ல நமக்கு உதவும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த 'புளூ ஓசன் வியூகத் திட்டம்' குறித்து அவரது பேட்டியை மேற்கண்ட காணொளியில் விரிவாக காணலாம்.   

கோலாலம்பூர், ஜூன்.-15- அஸ்ட்ரோ வரிக்கு பிந்திய இலாபமாக (PATAMI) 196 மில்லியன் ரிங்கிட் ஈட்டியுள்ளது. இலவச செயற்கைக்கோள் தொலைக்காட்சி சேவையான ‘என்ஜோய்’ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து வளர்ச்சி கண்டுள்ளது என்று அறிக்கை ஒன்று தெரிவித்தது.

“சவால்மிக்க இன்றைய பங்குச் சந்தையில் அஸ்ட்ரோ தொடர்ந்து நிலையான வருவாய் மற்றும் இலாப வளர்ச்சி எட்டுவதில் கவனம் செலுத்தி வந்துள்ளது என்று அஸ்ட்ரோ நிறுவனத்தின் தலைவர் துன் சாக்கி அஸ்மி கூறியுள்ளார். இதன் வழி,  இடைக்கால இலாப ஈவாக ஒவ்வொரு பங்குக்கும் 3 சென்கள் வழங்கப்படும் என்பதை இயக்குநர் வாரியம் பெருமனதுடன் அறிவிக்கின்றது என்று அவர் சொன்னார்.    

மேலும்  இது குரித்து அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் கூறியதாவது:

மலேசியா மற்றும் பிராந்தியத்தில் வாடிக்கையாளர்களின் உறவை மேம்படுத்தி வளர்ப்பதை வருவதை அதிகரிக்கிறோம். டிஜிட்டல் தளங்களைப் பயன்படுத்துவதானது தனிநபர்களுக்கு சேவை செய்வதன் மூலம் எங்களின் செலவைக் குறைக்க உதவுகிறது. 

எங்களின் அஸ்ட்ரோ தொலைக்காட்சி சேவை மலேசியாவிலுள்ள 71% குடும்பங்களில் ஊடுருவியுள்ளது. அதாவது, 5.2 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள அஸ்ட்ரோ, சுமார் 21 மில்லியன் பேருக்கு இச்சேவை வழங்கி வருகின்ற நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் 75% வீட்டிற்குள் ஊடுருவி வருவதற்கான பாதையில் நாங்கள் இருக்கிறோம். 

எங்களின் அஸ்ட்ரோ வானொலி 15.6 மில்லியன் ரசிகர்கள் கொண்டு தொடர்ந்து முன்னிலை வகித்து மலேசியாவில் பிரபலமான வானொலி நிலையமாக விளங்குகின்றது. அதுமட்டுமின்றி, எங்களின் டிஜிட்டல் அகப் பக்கங்களை சுமார் 7.5 மில்லியன் பார்வையாளர்கள் ஈர்த்துள்ள அதை வேளையில் 66 மில்லியன் பேர் எங்களின் அகப்பக்கத்தைப் பார்வையிட்டுள்ளன. 

அஸ்ட்ரோவின் உள்நாட்டு தயாரிப்பில் வெளிவந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அதிகமானவர்கள் கண்டு களித்துள்ளார்கள். அவ்வகையில், Maharaja Lawak Mega 2017 நிகழ்ச்சியை 4.9 மில்லியன் கண்டு களித்துள்ள அதை வேளையில், டிஜிட்டல் மற்றும் சமூக வளத்தளங்களின் வாயிலாக முறையே 28 மில்லியன் மற்றும் 58 மில்லியன் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

எங்களின் பலத்தரப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி பார்ப்பவர்களின் பங்கு 76% சதவிதத்தை எட்டியுள்ள வேளையில் தினந்தோறும் சராசரி 4 மணி நேரம் அஸ்ட்ரோவின் நிகழ்ச்சிகளைக் கண்டுக் களிக்கின்றனர். 

“நாம் இப்போது சவால்மிக்க ஒரு கட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். 2018-ஆம் நிதியாண்டுக்கான முதல் காலாண்டில் நமது வருமானம் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் மிதமான அளவிலேயே பதிவாகியுள்ளது. உரிம வருமான சரிவே அதற்கு காரணமாகும். எங்களது விளையாட்டு அலைவரிசைகளின் துணை உரிமம் அதற்கு வித்திட்டுள்ளது. 

எங்கள் வாடிக்கையாளர்களின் பங்கேற்பை மேலும் ஆழமாக்குவதிலும், விரிவாக்குவதிலும் நாங்கள் முன்னேற்றகரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். எங்கள் செயலாக்கத்தின் முடிவிலும் அது வெளிப்படுகிறது. 

எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கை முறை தேர்வு டிஜிட்டல் மயமாகவும், கையடக்க முறையிலும், தனிப்பட்டதாகவும் வேகமாக மாறி வருகிறது. அவர்களுக்குச் சேவையளிக்க ஏதுவாக எங்களது மொத்த வர்த்தகத்தையும் நாங்கள் தீவிரமாக மறுசீரமைத்து வருகிறோம்.

மேற்கண்டவாறு அஸ்ட்ரோவின் தலைமை நிர்வாக அதிகாரி, டத்தோ ரோஹானா ரோஷன் குறிப்பிட்டார். 

 புத்ராஜெயா, மே.24- சீனாவைச் சேர்ந்த ஷிஜியாங் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனம் மலேசியாவின் புரொட்டோன் ஹோல்டிங்ஸ் கார் நிறுவனத்தின் 49.9 விழுக்காடு பங்குகளை வாங்குகிறது என அறிவிக்கப்பட்டது.

இந்தப் பங்குகளை இதுவரை வைத்திருந்த டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் நிறுவனத்திடமிருந்து இப்போது சீன நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளது.

அதேசமயத்தில், இந்த வர்த்தக இணக்கத்தின் ஒரு பகுதியாக, லோட்டஸ் கார் நிறுவனத்தின் ஒட்டுமொத்த பங்குகளையும் கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனமே வாங்கிக் கொள்ள முன்வந்துள்ளது.

நஷ்டத்தில் புரொட்டோன் நிறுவனம் இருந்து வந்த நிலையில் அதன் பங்குகளை கீலி ஹோல்டிங்ஸ் நிறுவனம் வாங்கி இருப்பதன் வழி புரொட்டோன் புது உந்துதலைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மார்ச் மாதத்தின் முடிவில் புரொட்டோன் கிட்டத்தட்ட 100 கோடி ரிங்கிட் வரையில் இழப்பை அடைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பங்கு விற்பனைக்கான உடன்பாடு காணப்பட்டிருக்கிறது. அடுத்த ஜூலை மாதம் இதற்கான உடன்பாடு திட்டவட்டமாக கையெழுத்தாகும் என்று டிஆர்பி-ஹைகோம் பெர்ஹாட் தெரிவித்தது.

 

 

 

 கோலாலம்பூர், ஏப்ரல்.21- பங்குச் சந்தை நிலவரம் தொடர்ந்து மேல்நோக்கிச் சென்று கொண்டிருக்கும் நிலை நீடிக்குமானால் தொழிலாளர் சேமநிதியான இபிஎப் வாரியம் தனது உறுப்பினர்களுக்கு வழங்கும் இலாப ஈவு இவ்வான்டில் கூடுதலாக அமைய வாய்ப்பு இருக்கிறது.

கடந்த இரண்டுகளாக, அதாவது 2015 மற்றும் 2016 ஆகிய இரு ஆண்டுகளிலும் குறைவான இலாப ஈவையே இபிஎப் வழங்கியது.  ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டில் 6.75 விழுக்காடு வரை இலாப ஈவு வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2 ஆண்டுகளாகவே பங்குச் சந்தையில் தரமான முதலீடுகளைச் செய்வதில் ஏற்பட்ட குறைபாடுகள் காரணமாக குறைந்த இலாப ஈவு வழங்கப்பட நேர்ந்தது.

ஆனால், இவ்வாண்டில் பங்குச் சந்தை நிலவரத்தில் நல்ல முன்னேற்றம் தென்படத்தொடங்கி விட்டது. இந்நிலை இவ்வாண்டு இறுதிவரை நீடிக்குமானால் இலாப ஈவை அதிகரிப்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று இபிஎபின் தலைமை நிர்வாகச் செயல் அதிகாரி டத்தோ ஷாரில் ரிட்ஸா ரிடுவான் சொன்னார்.

 

Advertisement