சிவராத்திரி என்பது சிவனின் தெய்வீக பிறப்பைக் குறிப்பதாகும். உலகில் யாருடைய பிறந்த தினத்தைக் கொண்டாடினாலும் அதைப் பிறந்த தினம் என்றே அழைக்கிறோம். இரவு 12 மணிக்கு பிறந்தாலும் அதைப் பிறந்த ராத்திரி என அழைப்பது இல்லை. மாறாக பிறந்த தினம் என்றே குறிப்பிடுகிறோம். ஆனால் சிவனுடைய பிறந்த தினத்தை மட்டும் ஏன் சிவராத்திரி என நாம் கூறுகின்றோம்? ராத்திரி என்பது 24 மணிக்கொரு முறை வருகின்றதே அந்த ராத்திரி அல்ல. மாசி மாதம் கடைசி இரவு நேரம். இந்தக் கடும் இரவுக் காலத்தில் தான் சிவராத்திரி தினம் வருகின்றது. அதர்மம் என்ற அஞ்ஞான இருள் எப்போது முழுமையாக உலகைச் சூழ்ந்திருக்கின்றதோ அப்போது மெய்ஞானம் எனும் ஒளிக் கிரணங்களால் தர்மத்தை நிலைநாட்ட சிவபெருமான் இப்பூமியில் தெய்வீக அவதாரம் செய்கின்றார். சிவராத்திரி பண்டிகை என்பது மூன்று கருப்பொருளை மையமாக வைத்து அனுசரிக்கப்பட்டு வருகின்றது. இந்தக் கருப்பொருளில் இலைமறை காயாக மூன்று உண்மைகள் மறைந்திருக்கின்றன.
விரதம்
சிவராத்திரி தினத்தன்று அனுசரிக்கப்படும் விரதம் அல்லது உபவாசம் என்பது மனதை பரமாத்வாகிய சிவனிடம் செலுத்த்தி ஆழமான அன்பு நினைவில் மூழ்கி அவர் அருகாமையில் வாசம் செய்வதுதான் உண்மையான உபவாசம் ஆகும். 'உப' என்றால் அருகாமை 'வாசம்' என்றால் நெருங்குதல்... அதாவது நினைவில் ஒன்றி இருப்பது.
கண்விழிப்பு
சிவராத்திரியை முன்னிட்டு இரவு முழுவதும் கண்விழித்து பஜனை பாடுவதும் பூஜைகள் செய்வதுமாக இரவைக் கழிக்கின்றோம். இதன் உட்பொருளை உணருவது அவசியமாகிறது. நாம் வாழ்ந்து கொண்டிருப்பது இந்த உலக நாடகத்தின் கடைசி யுகமான கலியுகம்.ஐந்து விகாரங்கள் என்ற தீய சக்திகளின் கோரப் பிடியில் இருந்து விடுபட்டு நம்மை நாம் பாதுகாத்துக் கொள்வதற்காக அஞ்ஞான உறக்கத்திலிருந்து விழிப்புணர்வுடன் பாதுகாப்பாக இருப்பது என்பதுதான் கண்விழித்தல் ஆகும். அதாவது சதா இறைவனின் சகவாசத்தில் மூழ்கி இருப்பதன் மூலம் நாம் அந்த தீய சக்திகளின் மூலம் பாதிக்கப்படாமல் இருக்க முடியும். இதற்கு அஸ்திவாரமாக திகழ்வது ஆன்மீக ஞானமும் தியானமும் ஆகும்.
தனித்திரு
ஆமையானது தனக்கு தேவையானதை தனது புலன் மூலம் பெற்று பிறகு தனது ஓட்டுக்குள் அவற்றை இழுத்துக் கொண்டு அமைதியாக ஓரிடத்தில் இருந்து விடுகிறது. நாம் அனைவரும் இந்த உடலில் வாழும் ஆத்மாக்கள். உடல் என்பது நமது உபயோகத்திற்காகவே. இந்த உடலில் இருக்கும்வரை நாம் அதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்போது இந்த உடலில் இருந்து விடுபட்டு இருக்க நாம் பழகிக் கொள்ள வேண்டும்.அதாவது, ஆத்ம உணர்வை அனுபவம் செய்யப் பழகிக் கொள்ள வேண்டும். ஆத்மா என்பது நிரந்தரமானது, அழியாதது, உடல் என்பது அழியக்கூடியது. எந்தளவுக்கு நம்மை நாம் ஆத்மாவாக அனுபவம் செய்கிறோமோ அந்த அளவுக்கு நமக்குள் அமிழ்ந்து கிடக்கும் ஆன்மீக குணங்களான அன்பு, அமைதி, கருணை, இனிமை, பொறுமை போன்றவற்றை அனுபவம் செய்ய அது பெரிதும் துணைபுரியும். உடல் உணர்வே அனைத்து தீய குணங்களுக்கும் ஆணி வேராக திகழ்கிறது. ஆகவே நம்மை நாம் ஆத்மாவாக கருதி பரமாத்மாவோடு நல்லதொரு தொடர்பினை நாம் சுலபமாக ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆகவே இந்த வருடம் நாம் இந்த மூன்று கருப்பொருளை நமது மனதில் நிலை நிறுத்தி சிவராத்திரி பண்டிகையை கொண்டாடி நமக்குள் மாற்றத்தைக் கொண்டு வருவோம்.