Top Stories

Grid List

கோலாலம்பூர், மே 29- வணக்கம் மலேசியாவும் ஏசான் ஜெயா நிறுவனமும் இணைந்து துபாய் ஜூவலர்ஸ் இணை ஆதரவுடன் நடத்திய அன்னையர் தின கவிதைப் போட்டியில் வென்ற மூன்று வெற்றியாளர்கள் தங்கள் அம்மாவுடன் தலைநகரில் உள்ள ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் இரவு உணவு விருந்தில் கலந்து கொண்டனர்.

"அம்மா.. உனக்கான என் வரிகள்" எனும் தலைப்பிலான கவிதைப் போட்டியில் 58 போட்டியாளர்கள் கலந்து கொண்டவேளை, அதிலிருந்து மூவர் வெற்றியாளராக வெற்றி பெற்றனர். அவர்களுக்கு முதல் பரிசான, இருவர் பங்கேற்கும் இரவு உணவு விருந்து தலைநகரில் உள்ள லீ மெரிடியன் ஐந்து நட்சத்திர தங்கும் விடுதியில் வழங்கப்பட்டது.

இதில் வெற்றியாளர்களான ஶ்ரீ ஆர்த்தி, விஜய ரத்தினம் மற்றும் நித்தியா ஆகியோர் தங்கள் அம்மாவுடன் விருந்தில் கலந்து கொண்டனர். வணக்கம் மலேசியாவின் நிர்வாக இயக்குனர் தியாகராஜன் முத்துசாமி வெற்றியாளர்களின் அம்மாவிற்கு பரிசை எடுத்து வழங்கினார்.

விருந்தில் கலந்து கொண்ட ஶ்ரீ ஆர்த்தியின் தாயார் செண்பகவள்ளி கூறுகையில், "விருந்தில் கலந்து கொண்டது மிக மகிழ்ச்சியான தருணம். இந்த சந்தோசத்தை 1000 வெள்ளி கொடுத்தாலும் பெறமுடியாது" என கூறினார்.

வெற்றியாளரான விஜய ரத்தினம், "பல கவிதைகளை நான் எழுதியுள்ளபோதும் என்னுடைய அம்மா பற்றி கவிதை ஏதும் எழுதியதில்லை. இதற்கு வாய்ப்பு கொடுத்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தும் வழங்கிய வணக்கம் மலேசியாவிற்கு நன்றி கூறி கொள்கிறேன்" என்றார்.

கோலாலம்பூர், மே.29- மலேசியாவில் அடிக்கடி மழை அதிகளவில் பெய்து வருவதால் காய்கறிகளின் விலை அதிகரித்து வருகிறது. ஏறக்குறைய 15லிருந்து 20 விழுக்காடு வரை இந்த விலை அதிகரிப்பு இருப்பதாக தெரிய வருகிறது.

மலேசியா மட்டுமின்றி காய்கறிகளை ஏற்றுமதி செய்யும் பல ஆசிய நாடுகளிலும் மழைப் பருவம் ஆரம்பித்ததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது.

மழை நீர் பயிர் நிலங்களில் தேங்குவதால் காய்கறிகள் அதிகளவில் வீணாகுகின்றன. அதனால் தேவைக்கு ஏற்ப காய்கறிகளின் விநியோகம் இல்லாததால் அதன் விலை ஏற்றம் கண்டுள்ளது. 

மலேசியாவில் மட்டுமின்றி, மலேசிய காய்கறிகளை இறக்குமதி செய்யும் சிங்கப்பூரிலும் இந்த விலை ஏற்றத்தின் தாக்கம் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

சிங்கப்பூரில் பயிரிடப்படாத சில காய்கறிகளின் விலை 50 விழுக்காடு அளவிற்கு கூட விலை உயர்ந்துள்ளது. காரணம் இந்த காய்கறிகள் மலேசியாவிலும் கிடைப்பதில்லை, மாறாக வெகு தொலைவில் இருக்கும் நாடுகளிலிருந்து இந்த காய்கறிகளை இறக்குமதி செய்வதால் இந்த தாக்கம் ஏற்படுகின்றது என சிங்கப்பூர் பழம், காய்கறி விநியோக சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜெரி தான் கூறுகின்றார். 

பெட்டாலிங் ஜெயா, மே 29 - 10 வருடங்கள் மலையேறி பெரும் உழைப்பிற்கு பின் முதல் முயற்சியிலேயே எவரெஸ்ட் மலையின் உச்சியை அடைந்து சாதனை படைத்துள்ளார் மலேசியாவைச் சேர்ந்த இராமன் நாயர் அச்சுதன். இவரின் சாதனையால் மலேசிய இந்தியர்கள் பெருமிதம் கொண்டுள்ளனர்.

உலகிலேயே மிக உயர்ந்த மலையான எவரெஸ்டின் உச்சியை நோக்கி மேற்கொண்ட இராமனின் பயணம் கடந்த மே 5ஆம் தேதி தொடங்கியது. 15 நாட்கள் கடும் பயணத்தைத் தொடர்ந்து மே 20ம் தேதி இராமனின் கனவு நிறைவேறியது.

இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள மனதளவிலும் உடலளவிலும் உறுதியாகவும்  இருத்தல் அவசியம் என்று இராமன் தெரிவித்தார். தனது கனவு நிறைவேறும் வரை மன உறுதியோடு போராடியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எவெரஸ்ட் மலை ஏறும் போது சீதோஷ்ண நிலை மாற்றத்தின் காரணமாக சுவிஸ்லாந்து சேர்ந்த உலகின் சிறந்த மலையேறுபவரான உலி ஸ்தேக் உள்பட பத்து பேர் உயிரிழந்தனர்.

எவெரஸ்ட் மலையை ஏறும் முதல் முயற்சியாக சென்ற ஆண்டு நேபாளிலுள்ள 6145 மீட்டர் உயரமான  லோபுஷே மலையை ஏறினார் இராமன். அதோடு, பல கடினமான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு தன்னைத் தயார்ப்படுத்தியுள்ளார். 1953-லிருந்து எவரஸ்ட் மலையை ஏறும் போது 200-க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கோத்தா பாரு, மே.29- பள்ளி மாணவியை இருமுறை கற்பழித்த குற்றத்திற்காக ஓர் ஆங்கில மொழி ஆசிரியருக்கு, இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் 34 ஆண்டுகள் சிறை தண்டனையும் 8 பிரம்படி தண்டனையும் விதித்தது. 

இன்று முதல் அத்தண்டனைகளை தொடங்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நூர்ஹஸ்லிமான் கசாலி (வயது 36) என்ற அந்த ஆசிரியர் கடந்த 2015 ஆண்டு மே மாதத்தில், அப்போது 15 வயதாக இருந்த அந்த மாணவியை இரண்டு முறை கற்பழித்துள்ளார்.

ஆரம்பப் பள்ளி ஆசிரியரான கசாலி மீது குற்றவியல் சட்டப் பிரிவு 376 (1)இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. கசாலியின் வழக்கறிஞர் வாதத்தை ஏற்க மறுத்த நீதிபதி நஸ்ரி இஸ்மாயில் தண்டனையை விதித்தார்.

 

கோலாலம்பூர், மே.29- இஸ்லாமிய மதத்தினை தீவிரவாதத்துடன் சம்பந்தப்படுத்தும் வகையில் வெளியான முன்பக்க செய்திக்காக விளக்கம் அளிக்க தி ஸ்டார் நாளிதழைப் பிரதிநிதித்து 4 பேர் இன்று உள்துறை அமைச்சகத்திற்கு சென்றனர். அதில் மூன்று பேர் நாளிதழின் தலைமை ஆசிரியர்கள் ஆவர்.

“அவர்கள் அளித்த விளக்கம் பரிசீலனை செய்யப்படும். ஆனால், விசாரணைக் குழு அதை ஏற்க மறுத்தால் அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று உள்துறை அமைச்சின் செயலாளர் அல்வி இப்ராஹிம் கூறினார்.

இஸ்லாமிய மதத்தினரின் மனதை புண்படுத்தும் வகையில் தி ஸ்டார் ஆங்கில நாளிதழ் நடந்து கொண்டுள்ளது. முன்பக்கத்தில் முஸ்லீம்கள் தொழுகை செய்யும் புகைப்படத்தையும் தீவிரவாதம் குறித்து மற்றொரு தலைப்பையும் வெளியிட்டது இஸ்லாமிய மதம் தீவிரவாதம் கொண்டது என தோற்றம் அளிப்பதைப் போலஇருப்பதாக அல்வி இப்ராஹிம் மேலும் கூறினார்.

பெட்டாலிங் ஜெயா, மே 29 – இணையதளத்தின் வழி ஏர் ஆசியா நிறுவனம் இலவச டிக்கெட்டுகளை வழங்கவுள்ளதாக முகநூலில் வந்த தகவல் வெறும் வதந்தி என்று ஏர் ஆசியா நிறுவனம் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

268 இலவச டிக்கெட்டுகள் மற்றும் ஆய்வு கணக்கெடுப்பில் பொது மக்களின் பங்கெடுப்பு/ ஆகிய இரு செய்திகள் முகநூலில் பரவலாகி வந்ததைத் தொடர்ந்து அவ்விரு செய்திகளும் பொய்யான தகவல் என்று ஏர் ஆசியா உறுதிப்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வெளிவரும் வதந்திகளை உடனடியாக நம்ப வேண்டாம் என்று அந்நிறுவனம் பொது மக்களை எச்சரித்துள்ளது. அதோடு, அனைத்து தகவல்களையும் ஏர் ஆசியாவின் அதிகாரப்பூர்வ அகப்பக்கத்தில் உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு ஏர் ஆசியா நிறுவனம் அறிவுரைத்துள்ளது.

கோலாலம்பூர், மே 29- முஸ்லீம் தொழுகையையும் தீவிரவாதத்தையும் தொடர்புபடுத்தும் வகையில் தி ஸ்டார் நாளிதழ் வெளியிட்ட முதல் பக்க செய்தி தொடர்பாக நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு இன்று சம்மன் அனுப்பப்படும் என உள்துறை அமைச்சு கூறியுள்ளது.

கடந்த சனிக்கிழமை, ரமலான் மாதத்தை முன்னிட்டு முஸ்லீம்கள் தொழுகை மேற்கொள்ளும் புகைப்படத்தையும் தீவிரவாதம் குறித்த மற்றொரு தலைப்பையும் தி ஸ்டார் நாளிதழ் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டது. 

தலைப்புக்கும் படத்திற்கும் தொடர்பு இருப்பது போல் தோற்றம் அளித்ததால் அச்செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, சம்பந்தப்பட்ட நாளிதழின் தலைமை ஆசிரியருக்கு விளக்கம் கோரி இன்று சம்மன் அனுப்படும் என உள்துறை அமைச்சின் செயலாளர் அல்வி இப்ராஹிம் நேற்று கூறினார். 

"முதல் பக்க செய்தி தொடர்பாக தலைமை ஆசிரியருக்கு சம்மன் அனுப்பப்படும். அவர்களின் விளக்கம் திருப்தி தராவிட்டால் மேற்கொண்டு விளக்கம் கோரும் கடிதம் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என அவர் கூறினார். 

கோலாலம்பூர், மே.29- ஆகஸ்டு மாதம் மலேசியாவில் சீ விளையாட்டு போட்டி நடக்கவிருப்பதால் போலீசார் ஆங்காங்கே பல பாதுகாப்புச் சோதனைகளை நடத்தி வருகின்றனர். கடந்த சில தினங்களில் ஐஎஸ் தீவிரவாத கும்பலுடன் தொடர்பிருப்பதாக சந்தேகிக்கப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டை சுற்றிலும் உள்ள எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ ஸாஹிட் ஹமிடி கூறினார். தீவிரவாதிகள் மலேசியாவிற்குள் நுழைவதைத் தடுக்க இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது என உள்துறை அமைச்சருமான அவர் கூறினார்.

அண்டை நாடுகளான இந்தோனிசியா, தாய்லாந்து மற்றும் பிலிப்பினா நாட்டிலிருந்து தப்பி மலேசியாவிற்குள் நுழைய தீவிரவாதிகள் முற்படலாம். அதனால் உள்துறை அமைச்சும், அரச மலேசிய போலீஸ் படையும் இணைந்து இந்த பாதுகாப்பு திட்டங்களை மேற்கொள்கின்றன.

மலேசியாவில் தீவிரவாத தாக்குதல்கள் நடக்க வாய்ப்பிலை. அரசு அதிகாரிகள் தீவிரவாதத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகின்றனர். இருப்பினும், பொதுமக்கள் தங்களின் பாதுகாப்பில் அக்கறைக் கொள்ளவேண்டும். தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று யார் மீதாவது சந்தேகம் இருந்தால் உடனடியாக போலீசுக்கு தகவல் கொடுக்கும்படி பொதுமக்களுக்கு ஸாஹிட் ஹமிடி கோரிக்கை விடுத்தார்.

கோலாலம்பூர், மே 29- ரமலான் மாதத்தில் நோன்பு மேற்கொள்ளாதவர்களைக் கைது செய்து அதில் பணத்தைச் செலவழிப்பதை விடுத்து ஏழைகளுக்கு உதவ அந்த பணத்தைக் கொடுத்து உதவுமாறு அமைச்சர் கைரி ஜமாலுடின் சமய இலாகாக்களிடம் கேட்டுக் கொண்டார்.

ஹரிராயாவைக் கொண்டாடுவதற்கு முன் முஸ்லீம்கள் ஒரு மாத காலம் நோன்பு மேற்கொள்வது வழக்கம். ஆனால், சிலர் நோன்பு மேற்கொள்ளாமல் பொது இடங்களில் கூட சாப்பிடுவதும் தண்ணீர் அருந்துவதும் புகைப்பிடிப்பதும் என சமயத்திற்கு எதிராக நடப்பதினால் சமய இலாகாகள் அவர்களைக் கைது செய்து அபராதம் விதிப்பர்.

இந்த அமலாக்கப்பணிகளுக்கு பணத்தைச் செலவழிப்பதை விடுத்து, தேவைப்படுவோருக்கும் ஏழைகளுக்கும் அப்பணத்தை செலவு செய்யுங்கள் என இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

1997ம் ஆண்டு கூட்டரசு பிரதேசங்களின் ஷரியா குற்றவியல் சட்டத்தின் கீழ், நோன்பு காலத்தில் பொது இடங்களில் சாப்பிடும், நீர் அருந்தும் அல்லது புகைப்பிடிக்கும் முஸ்லீம்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு ரிம.1000த்திற்கு மேல் போகாத அல்லது ஆறு மாத சிறை அல்லது இரண்டுமே அபராதமாக விதிக்கப்படும். 

பாட்னா, மே.29- இரண்டு பெண்டாட்டிக்காரன் கதை, ஒரு நாள் இல்லாவிட்டாலும் ஒருநாள் தெருவுக்கு வந்து விடும் என்பார்கள்.  பீகாரில் அப்பட்டிப்பட்ட ஒருவரின் விவகாரம், வினோதமான தீர்ப்பில் முடிந்தது. 3 நாள் இங்கே..,, 3 நாள் அங்கே..,, எஞ்சிய ஒருநாள் சந்நியாசம் எனத் தீர்ப்பாகி உள்ளது.

இரகசியமாக இரண்டு பெண்களை மணந்து கொண்டு  இரு மனைவிகளிடம் சிக்கித் தவித்தவருக்கு அந்த மாநில போலீசாரினால் வினோதமான தீர்ப்பு வழங்கப்பட்டது.

பாட்னாவை சேர்ந்தவர் அருண்குமார். இவர் நர்ஸிங் ஹோம் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு மீனா என்பவருடன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்    நடைபெற்றது. இவர்களுக்கு வயது வந்த பிள்ளைகள் உள்ளனர்.

அருண் தன்னுடைய கணவர் என்று பூஜா என்பவர் சொந்தம் கொண்டாடினார். இவர் தன்னுடன் தான் வாழவேண்டும் என்று அவர் தெரிவித்தார். இதனால், மீனாவின் மனதில் புயல் வீசத் தொடங்கியது.

அருண் மீது மீனாவும், பூஜாவும் உரிமை கொண்டாடி புல்வாரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அருண்குமாரை போலீசார் காவல் நிலையத்துக்கு நேற்று காலை 10 மணிக்கு வரவழைத்தனர்.

அருணின் முதல் மனைவியான மீனா, தனக்கும், அருணுக்கும் திருமணமாகி வயது வந்த பிள்ளைகள் உள்ளனர் என்று தன் தரப்பு ஆதாரங்களைக் காட்டினார். அதேபோல் பூஜாவும் அருணுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள், ஆடியோக்களை ஆதாரங்களாக சமர்ப்பித்தார்.

இருவரும் மாறி மாறி ஆதாரங்களை காண்பித்தால் போலீஸார் மண்டையை பிய்த்து கொண்டனர். பின்னர் உண்மையை சொல்லாவிட்டால் முதல் மனைவி இருக்கும் போதே இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக புகார் அளித்து ஜெயிலில் தள்ளிவிடுவேன் என்று மீனா, அருணை மிரட்டினார்.

இதைத் தொடர்ந்து இறுதியாக, இரு பெண்களையும் திருமணம் செய்து கொண்டிருந்ததை அருண ஒப்புக்கொண்டார்.

இதுபோல் இரு மனைவிகளின் சண்டை என்றாலே அதுவும் காவல்நிலையம் வரை சென்று சண்டைகளில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்வதுதான் போலீசார் எடுக்கும் முடிவாக இருக்கும். 

ஆனால் இந்த வழக்கில் அருண் முதல் மனைவி மீனாவுடன் வாரத்தில் 3 நாள்களும், இரண்டாவது மனைவி பூஜாவுடன் 3 நாள்களும், மீதமுள்ள ஒரு நாள் தனித்தும் வாழ வேண்டும் என்பது வினோதனமான தீர்ப்பை வழங்கினர். இந்த தீர்ப்பை இரண்டு மனைவிகளும் ஏற்றுக் கொண்டனர்.

ஆகக் கடைசியாக கணவர் அருணும் ஏற்றுக்கொண்டார். எனினும் 3 நாள் இங்கே, 3 நாள் அங்கே என்றாலும் எஞ்சிய ஒருநாள் தனிமையில் இருக்கும் கணவரின் மீது ஒருகண் இருக்கட்டும் என்று இரு மனைவிகளையும் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர் போலீசார்.

 

ஐதராபாத், ஜூன் 29- ஒன்றாக சேர்ந்து வாழலாம் என்று கூறி ஏமாற்றி அழைத்துச் சென்று சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஷேக்குக்குத் தன் மனைவியை விற்ற கணவனின் செய்தி பலரின் கண்டனத்திற்கு ஆளாகி தற்போது சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தைச் சேர்ந்த 23 வயது நிறைந்த சயிரா பானுவுக்கும், ஒமருக்கும், 2014-இல் திருமணம் நடந்தது. சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் வேலை செய்து வரும் ஒமர், திருமணம் முடிந்தவுடன், அங்கு சென்று விட்டான். ஐதராபாத் வரும்போதெல்லாம், மனைவியைக் கொடுமை படுத்தியுள்ளான் என்று போலீசார் கூறியுள்ளனர்.

'ரியாத்துக்கு அழைத்துச் செல்கிறேன். அங்கு ஒரு ஷேக் வீட்டில் வேலை பார்ப்பதற்கு விசா கிடைத்துள்ளது. ஒரு மாதம் அங்கிருக்க வேண்டும். அதன்பின், நாம் இருவரும் சேர்ந்து வாழலாம்' என ஆசை வார்த்தைக் காட்டி பேசியுள்ளான். சாயிரா பானுவுக்கு போலி பாஸ்போர்ட் தயாரிக்க வைத்து, ரியாத் அழைத்துச் சென்றுள்ளான். 

மே 2-ஆம் தேதி ரியாத் சென்றடைந்த சாயிரா பானுவை ஒரு ஷேக் வீட்டில் தங்கியிருக்க வைத்தான். அங்கு வீட்டு வேலை செய்ய வேண்டும் என ஒமர் கூறியுள்ளான். ஆனால், அந்த ஷேக், சாயிராவுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளான்.

சாயிரா தன் கணவனுக்கு அழைத்து அந்த ஷேக் பாலியில் தொந்தரவு கொடுப்பதாகக் கூறினாள். அவன் 'நான் உன்னை ஷேக்குக்கு விற்று விட்டேன். இப்போது உன்னை விவாகரத்து செய்கிறேன்' என தொலைபேசியில் கூறியுள்ளான் அந்தக் கொடூரன்.

சாயிரா பானுவின் தாய் பானு பேகம், போலீசில் புகார் கொடுத்துள்ளார். இது குறித்து விசாரித்து வருகிறோம் என்று  போலீசார் கூறினர். சவுதியில் உள்ள தன் மகளை மீட்க உதவ வேண்டும் என, மத்திய வெளியுறவு அமைச்சர்  சுஷ்மா சுவராஜுக்கு, சாயிராவின் தாய் கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.